புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்பு

டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா இன்று காலை 10.15 மணிக்கு நடக்கிறது. பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக காலை 9.25 மணிக்கு திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகைக்கு வருகிறார். அதையடுத்து 9.50 மணிக்கு திரவுபதி முர்முவும், ராம்நாத் கோவிந்தும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்துக்கு புறப்படுகிறார்கள். அவர்கள் நாடாளுமன்றம் வந்த பின், அங்கு அவர்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். 10.15 மணிக்கு திரவுபதி முர்மு நாட்டின் 15வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய ஜனாதிபதி பதவி ஏற்றதும் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்கும். பின் திரவுபதி முர்மு பதவி ஏற்பு உரை ஆற்றுவார். இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள் , முப்படை தளபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
Tags :