முன்களப் பணியாளர்களுக்காக ஸ்மார்ட் மாஸ்க் உருவாக்கிய 19 வயது மாணவர்!
கொரோனா பெருந்தொற்று நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நொடி முதலே நோய் தொற்று பாதிப்பில் இருந்து மக்கள் தப்ப முகக்கவசம் அணிவது அவசியம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் நடைமுறையில் இந்த முகக்கவசம் அணிவது என்பது பலருக்கு பலவிதங்களில் சங்கடங்களை கொடுத்து வருவதாக சொல்கின்றனர். உதாரணமாக ஒருவருடன் பேசும் போது தர்ம சங்கடத்தை கொடுக்கலாம் என சில ஆய்வு முடிவுகளும் சொல்கின்றன. அதனால் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், சக பணியாளர்கள் என அனைவரும் பேசும் போது முககவசத்தை கீழ் இறக்கி பேசுவது உண்டு. அதனை ஏதோ உலக வழக்கம் போலவே பெரும்பாலான இடத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அது முககவசம் ஒருவர் எதற்காக அணிந்துள்ளார் என்பதற்கு முற்றிலும் எதிராக அமைகிறது.
இந்நிலையில் இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் டெக்னிக்கலாக யோசித்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 19 வயதான பொறியியல் கல்லூரி மாணவர் கெவின் ஜாக்கப் ஸ்மார்ட் முககவசத்தை உருவாக்கி உள்ளார்.
இனி அவர் தொடர்கிறார் 'எனது பெற்றோர்கள் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். அன்றாடம் பணி முடிந்து அவர்கள் வீட்டுக்கு திரும்பும் போது தொண்டையில் வலி மற்றும் தொண்டை கட்டு இருப்பதை என்னால் கவனிக்க முடிந்தது. அதற்கு காரணம் N95 மாஸ்க் மற்றும் ஃபேஸ் ஷீல்ட் மாதிரியானவற்றை அவர்கள் அணிந்திருப்பதால் நோயாளிகளுடன் பேசும் போது உரக்க பேச வேண்டியுள்ள காரணத்தினால் அந்த சிக்கலை அவர்கள் சந்திக்கிறார்கள் என தெரிந்து கொண்டேன். அதனால் கடந்த ஆண்டு ஸ்மார்ட் மாஸ்க் மூலம் அவர்களுக்கு உதவலாம் என எண்ணி அதுகுறித்து ஆன்லைனில் தேடினேன். இருந்தாலும் ஸ்மார்ட் மாஸ்க்குகளின் விலை அதிகமாக இருந்தது. அதனால் நானே அதனை வடிவமைக்கலாம் என முடிவு செய்தேன்.
அதனால் மினியேச்சர் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் குறித்து ஆன்லைனில் தேடிய போது அதன் விலையும் அதிகமாக இருந்தது. அதனால் யூடியூபில் பார்த்து மினியேச்சர் மைக் மற்றும் ஸ்பீக்கர்களை வடிவமைக்க முடிவு செய்தேன். அதற்கு உதவியாக எட்டாம் வகுப்பு படித்த போது நான் வடிவமைத்த 3டி பிரிண்டர் உதவியது. சில பல தோல்விகளுக்கு பிறகு நான் வடிவமைத்த மினியேச்சர் மைக் மற்றும் ஸ்பீக்கருக்கு இறுதி வடிவம் கொடுத்தேன்.
ஆனால் அது மிகவும் சவாலான டாஸ்க்காக இருந்தது. அதனை சில மருத்துவர்களிடம் கொடுத்து பரிசோதித்த போது அவர்கள் எதிர்கொண்ட பின்னடைவை சொல்லியிருந்தார்கள். அதன்படி மேலும் சில மாற்றங்களை செய்து எனது ஸ்பீக்கர் மற்றும் மைக்கை ஸ்மார்ட் கருவியாக மாற்றினேன். இதில் மைக்கை முககவசத்திலும், ஸ்பீக்கரை ஃபேஸ் ஷீல்ட் அல்லது முககவசத்திலேயே ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம்' என்றார்.
தனது பெற்றோர்களை வைத்தே தான் வடிவமைத்த ஸ்மார்ட் மாஸ்க்கை டெமோ செய்த கெவின் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் முககவசத்தை வடிவமைத்து முன்கள பணியாளர்களின் பயன்பாட்டுக்கு கொடுத்து உதவியுள்ளார்.
ஸ்பீக்கர் மற்றும் மைக்கை ஒரு வயர் மூலம் இணைத்து இதனை முகக்கவசத்தில் பொருத்தி பயன்படுத்தலாம் என்கிறார் அவர். 45 நிமிடம் இந்த கருவியை சார்ஜ் செய்தால் போதும் என சொல்கிறார் அவர். 'மைக் மற்றும் ஸ்பீக்கரை காந்தத்தின் உதவியோடு மாஸ்க்கில் பொருத்தி உள்ளார் கெவின்.
'நான் எனது படிப்பில் கவனம் செலுத்த வேண்டி உள்ளதால் இனி இந்த ஸ்மார்ட் மாஸ்குகளை நான் வடிவமைக்க போவதில்லை. அதே நேரத்தில் தொழில் ரீதியாக இதனை உருவாக்க விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்' என அவர் சொல்கிறார்.
கெவின் வடிவமைத்த ஸ்மார்ட் மாஸ்க்கை பயன்படுத்திய முன்கள பணியாளர்களும் இதற்கு பாசிட்டிவான ரியாக்ஷனை தான் கொடுத்துள்ளனர்.
Tags :