கப்பல் கட்டும் துறையில் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துவருவதாக பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் தகவல்.

by Editor / 07-08-2022 09:09:13pm
கப்பல் கட்டும் துறையில் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துவருவதாக  பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் தகவல்.

அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த இராணுவ தளவாட கப்பலான யு எஸ் என் எஸ் சார்லஸ் ட்ரூ. இந்திய பசுபிக் கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும். அமெரிக்கா கப்பற்படை கப்பல்களுக்கு தளவாட உதவிகள் செய்து வருகிறது.குறிப்பாக உணவு, எரிபொருள், கப்பல் பாகங்கள், மெயில் சேவை உள்ளிட்ட சேவைகள் வழங்கும் கப்பலாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்க படைகளுக்கு மட்டுமல்லாமல், இந்திய பசிபிக் பகுதியில் உள்ள பிற நட்பு நாட்டின் கப்பல்களுக்கும் இது போன்ற உதவிகளை செய்து வருகிறது.

689 அடி நீளம் கொண்ட இந்த கப்பல், 41 ஆயிரம் டன் பொருட்களை ஒரே சமயத்தில் எடுத்து செல்லும் திறன் கொண்டது. இதில் 63 கப்பல் சிப்பந்திகள் இருப்பார்கள். இதில் மளிகை பொருட்கள், எரிவாயு, ஹார்டுவேர், அஞ்சல் வசதியும் உள்ளது. இந்நிலையில் இந்த கப்பல் பழுதடைந்துள்ள காரணத்தால், அதன் பழுதுகளை சரி செய்ய சென்னை வந்துள்ளது.

இந்த கப்பலை பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் நேரில் வரவேற்று பார்வையிட்டார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும், இந்திய அமெரிக்க பாதுகாப்பு உறவுக்கும் குறிப்பிட தகுந்த மிக முக்கிய நாள் என கூறினார். மிகவும் குறுகிய காலத்தில், அமெரிக்கா கப்பற்படை கப்பல், எல் அண்டு டி துறைமுகத்தில் பழுது நீக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த பகுதியை தேர்வு செய்த அமெரிக்காவுக்கு நன்றி கூறினார்.

 இந்திய அமெரிக்க இடையிலான உறவு நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக கூறிய அவர், இந்திய பசுபிக் கடற்பரப்பில் இரு நாடும் பல முன்னேற்றங்களை அடைந்து வருவதாக தெரிவித்தார்.இந்தியாவின் கப்பல் கட்டும் துறை உலக தரத்தில் இருப்பதாக கூறிய அவர், இந்திய கப்பல் மட்டுமல்லாமல், சுவீடன், நார்வே, டென்மார்க் உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களையும் தயாரித்து வருகிறது. கடந்த 2015-2016ம் ஆண்டில் 1,500 கோடி ரூபாயாக இருந்த இந்த ஏற்றுமதி வர்த்தகம், தற்போது 13 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றார்.

இது கடந்த ஏழு ஆண்டுகளில் 80 சதவீத வளர்ச்சியாகும். கப்பல் கட்டும் துறையில் இந்தியா புதிய அத்தியாயத்தை சந்தித்து வருவதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல அமெரிக்க கப்பல்கள் இந்தியாவில் பழுது நீக்கம் செய்யப்படும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதை தொடர்ந்து பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக உறுப்பினர் ஜூடித் ராவின், இனி மேலும் பல கப்பல்கள் இங்கு பழுது நீக்கம் செய்யப்படும் இது, இந்தியா அமெரிக்கா இடையே இந்திய பசுபிக் பகுதியில் நீடித்த, வளமான, அமைதியான சூழல் ஏற்படும் என கூறினார்.

 

Tags : Defense Secretary Ajay Kumar informed that India is creating a new chapter in the shipbuilding industry.

Share via