மலையாளத்தில் பேசக்கூடாது என்ற சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது!

by Editor / 06-06-2021 12:44:42pm
மலையாளத்தில் பேசக்கூடாது என்ற சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது!

டில்லியில் உள்ள கோவிந்த் பல்லப் பந்த் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) செவிலியர்கள் மலையாளத்தில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.டில்லியில் உள்ள முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்று ஜிப்மர். தற்போது ஒரு சுற்றறிக்கையின் மூலம் தேசியளவில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இங்கு கேரளாவிலிருந்து அதிகமான செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் மலையாளம் தெரியாத சக ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் மலையாளத்தில் பேசுவதாகவும், அது நிறைய சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் செவிலியர் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றுள்ளது.இதனைத் தொடர்ந்து செவிலியர் கண்காணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "பெரும்பாலான நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு மலையாளம் தெரியாத போது அந்த மொழியில் பேசுவது உதவியற்ற நிலையையும், சிரமங்களையும் ஏற்படுத்துகிறது. எனவே அனைத்து செவிலியர்களும் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை தான் தொடர்புக்கு பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என கூறியிருந்தார்.இந்த சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்றது. காங்., வயநாடு எம்.பி., ராகுல், திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூர் ஆகியோர் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிக்கை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து தற்போது அவ்வறிக்கையை வாபஸ் பெறுவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

 

Tags :

Share via