பழங்குடியின விளையாட்டுகள் கண்டறிந்து மேம்படுத்தப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 12-09-2022 11:58:33am
பழங்குடியின விளையாட்டுகள் கண்டறிந்து மேம்படுத்தப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச மற்றும் தேசிய வீரர் வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஊக்கத்தொகை வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர் பாபு, மெய்யநாதன், தலைமை செயலாளர் இறையன்பு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக 187 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் சென்னை வந்தனர்.

சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடத்தி முடித்தோம். முதல் நாளில் எந்த அக்கறையுடன் செயல்பட்டோமே, அதேபோல் கடைசி நாள் வரை செயல்பட்டதாலேயே அதில் மாபெரும் வெற்றி பெற முடிந்தது என கூறினார். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று சென்னையில் உலக ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி தொடங்க உள்ளதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டால், விளையாட்டு துறையில் புது மறு மலர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆயிரத்து 130 வீரர்களுக்கு 28 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தொடங்கப்பட்டுள்ள ஆடுகளம் பக்கத்தில், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கான தீர்வுகளை பெற முடியும் என்றார்.

பழங்குடியின விளையாட்டுகளை கண்டறிந்து அதனை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மேற்கொள்ளும் என்ற அவர், விளையாட்டு வீரர்களாகிய நீங்கள் வெற்றி பெறுவதால் தமிழ்நாடு மற்றும் இந்தியா பெருமைப்படும் என்றும், அனைத்து விளையாட்டுகளிலும் சாதனை புரிய வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

 

Tags :

Share via