மின் கட்டண உயர்வை கண்டித்து விரைவில் போராட்டம் – ஜி.கே.வாசன்
தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து விரைவில் தாமாகா போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாண்டியன் இல்ல திருமண நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு திமுக அரசு என்றும், அதனை நிரூபிக்கும் வகையில் தமிழ் நாடு அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.இது ஏழை எளிய மக்களை மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. மின் கட்டண உயர்வால் சிறு தொழில் செய்பவர்கள், மற்றும் பொதுமக்கள என ஒவ்வொருவருக்கும் பொருளாதார ரீதியில் சிரமம் ஏற்படுவதோடு, விலைவாசி உயர்வதற்கான வாய்ப்பை இந்த அரசே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றார்.மக்கள் மீது திமுக அரசு சுமையை வைக்க விரும்புகிறது. எனவே, உடனடியாக மின் கட்டண அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்சனையைப் பொருத்தவரை தொடர்ந்து பல மாதங்களாக தமிழ் நாட்டில் கவலைக்கிடமான சூழல் உள்ளது . அதற்குச் சாட்சி தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது அரசின் கடமை. காங்கிரஸ் கட்சியில் ராகுல் தொடங்கி இருக்கும் நடைபயணம் அந்த கட்சிக்கும், கட்சியினுடைய தொண்டர்களுக்கும் இன்றைக்குத் தேவைப்படுகிறது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கிறது. இந்த நடைபயணம் மூலம் நாட்டு மக்களுக்கும், கட்சிக்கும் எந்த விதமான நன்மை பயக்காது என்பதுதான் என்னுடைய கருத்து என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Tags :