மலைபாம்பை பிடிக்கமுயன்றவர் மலைப்பாம்புடன் கிணற்றில் விழுந்து பலி

by Editor / 13-09-2022 09:15:17pm
மலைபாம்பை பிடிக்கமுயன்றவர் மலைப்பாம்புடன்  கிணற்றில் விழுந்து பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே மேல்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது  நிலத்தில் இவர்கள் ஊரில் புகுந்த 10 அடி நீளம் கொண்ட இராட்சத மலைப்பாம்பு ஒன்று ஆட்டுக்குட்டியை விழுங்கிய நிலையில் சின்னசாமியின் விவசாய நிலத்தில் பதுங்கிக்கொண்டது.

தனது விவசாய நிலத்தில் மலைப்பாம்பு இருப்பதை கண்ட விவசாயி இது குறித்து பனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர் நடராஜன் (வயது 50) என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் படி நடராஜன் அங்கு வந்து பார்த்தபோது கிணற்றுக்கு அருகில் மலைப்பாம்பு சுருண்டு கிடந்துள்ளது.

பின்னர் அதை  நடராஜன் பிடிக்க முயன்றபோது எதிர்பாராத சமயத்தில் வீறிட்ட மலைப்பாம்பு அவர் உடலை சுற்றிக்கொண்டது. பாம்பு நடராஜனின் உடலை இறுக்கிய நிலையில் பாம்பிடம் இருந்து விடுபட நடராஜன் தரையில் உருண்டு புரண்டுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் உடலில் சுற்றிய பாம்போடு நடராஜனும் விழுந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி சின்னசாமி இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்  தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் நடராஜன் உடலை மீட்டு கயிற்றில் கட்டி  மேலே கொண்டு வந்தனர்.மேலும், கிணற்றின் ஓரத்தில் இருந்த குழியில் பதுங்கி இருந்த மலைப்பாம்பையும் மீட்டனர்.

 

Tags :

Share via