27 மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்பு வங்கக்கடலில் புயல்

by Staff / 19-10-2022 05:29:10pm
27 மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்பு வங்கக்கடலில் புயல்

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்பதால், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த உருவாகக்கூடும். இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 22ஆம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், பெரம்பலூர், கடலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாமபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம் 33 - 34 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடைக்கிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via