ஆன்மீக சுற்றுலா ரயில் மூலம் ரயில்வே துறைக்கு ரூபாய் 6 கோடி வருமானம்

by Editor / 01-11-2022 08:39:55pm
ஆன்மீக சுற்றுலா ரயில் மூலம் ரயில்வே துறைக்கு ரூபாய் 6 கோடி வருமானம்

இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம் மிக்க வரலாற்று சிறப்புள்ள சுற்றுலா தலங்களை கண்டு களிக்க இந்திய ரயில்வே பாரத் கவுரவ் என்ற ஆன்மிக சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. அனுபவம் வாய்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் இதுவரை ஆறு ஆன்மீக சுற்றுலா ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது. இதன் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூபாய் 6.3 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஏழாவது ஆன்மீக சுற்றுலா ரயில் மதுரை கூடல் நகர் - பஞ்சாப் அமிர்தசரஸ் ரயில் நிலையங்களிடையே இயக்கப்பட உள்ளது. இந்த சுற்றுலா ரயில் தெலுங்கானா மௌலாளி, ஜெய்பூர், ஆக்ரா, அமிர்தசரஸ், கோவா போன்ற சுற்றுலா தலங்களை இணைத்து இயக்கப்படுகிறது. கூடல் நகர் - அமிர்தசரஸ் - கூடல் நகர் சுற்றுவட்ட சுற்றுலா ரயில் (06905/06906) கூடல் நகரில் இருந்து நவம்பர் 3 அன்று இரவு 07.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில், திருவனந்தபுரம், பாலக்காடு, போத்தனூர், சேலம், காட்பாடி வழியாக சென்று நவம்பர் 6 அன்று மௌலாளி, நவம்பர் 8 அன்று ஜெய்ப்பூர், நவம்பர் 9 அன்று ஆக்ரா, நவம்பர் 10 அன்று டெல்லி, நவம்பர் 11 அன்று அமிர்தசரஸ், நவம்பர் 13 அன்று கோவா போன்ற சுற்றுலா தலங்களை இணைக்கிறது. பின்பு மங்களூர், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக நவம்பர் 16 அன்று அதிகாலை 02.30 மணிக்கு கூடல் நகர் வந்து சேருகிறது.

 

Tags :

Share via