தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகவுள்ளது-வானிலை ஆய்வு மையம்

by Editor / 15-12-2022 10:14:43am
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகவுள்ளது-வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகவுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்பகுதியை நெருங்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், 16, 17,18ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 - 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகும்.

மேலும், வரும் 18ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தென் கிழக்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகவுள்ளது-வானிலை ஆய்வு மையம்
 

Tags :

Share via

More stories