ஏல சீட்டு நடத்தி ரூ. 2 கோடி மோசடி

ஈரோடு வி. வி. சிஆர் நகரை சேர்ந்த திருமூர்த்தி (62) என்பவர் இன்று ஈரோடு எஸ். பி. அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அந்த மனுவில் நான் ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். வியாபார அடிப்படையில் ஊஞ்சபாளையத்தைச் சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார். எங்களுக்குள் நீண்ட நாட்களாக நல்ல நட்பு இருந்து வருகிறது. இந்நிலையில் எனக்கு அறிமுகமான அந்த நபர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு என்னை அணுகி ஏலச்சீட்டு நடத்த இருப்பதாகவும் அதில் அவருக்கு அதிக அனுபவம் உள்ளது என்றும், அதற்கு நான் மார்க்கெட்டில் உள்ள எனது நண்பர்கள் , வியாபாரிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோரை ஏலச்சீட்டில் சேர்த்து விட வேண்டும் என்றும் தொடர்ந்து என்னிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் பேசினார். இதை உண்மையான நம்பி நண்பர்கள், உறவினர் மற்றும் வியாபாரிகள் ஆகியோரிடம் ரூ. 5 லட்சம் சீட்டு 2, ரூ. 10 லட்சம் சீட்டு ஒன்று, ரூ. 20 லட்சம் சீட்டு 2 என தலா 20 நபர்கள் கொண்ட மொத்தம் 5 வகை ஏல சீட்டுகளில் சேர்த்து விட்டேன். மேலும் மேற்படி 5 வகை ஏல சீட்டுகளிலும் நானும் தல ஒரு சீட்டு போட்டு வந்தேன். நாங்கள் தொடர்ந்து உரிய நேரத்தில் சீட்டுக்கான தொகையை அவரிடம் கொடுத்து வந்தோம். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து ஏல சீட்டுகளும் முடிவடையும் நிலையில் அந்த நபர் எங்களை சந்திப்பதை திடீரென தவிர்த்தார். ஏல சீட்டு போட்ட எனக்கும், ஏலச்சீட்டில் பணம் போட்ட மற்றவர்களுக்கும் எவ்வித தொகையும் தராமல் இருந்து வந்துள்ளார். இந்த வகையில் ரூ. 2 கோடியே 20 லட்சம் பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். பின்னர் பணம் கொடுக்காமல் அவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்நிலையில் ஏலசீட்டில் பணம் கொடுத்தவர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனால் அவர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் தொடர் வற்புறுத்ததன் காரணமாக எனக்கு தர வேண்டிய தொகையில் பகுதி தொகைக்காக 5 இடங்களை கிரையம் செய்து கொடுத்தார். மீதி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் இருக்கும் இடம் தெரிந்த அங்கு சென்று கேட்டபோது அப்பவும் மலுப்பலாக பதில் கூறினார். அவரது மனைவி எனக்கு மிரட்டல் கொடுத்தார். எனவே எங்களுக்கு பணம் தராமல் மோசடி ஈடுபடும் அந்த நபர் மீதும் அவருக்கு துணையாக இருப்பவர்கள் மீதுசட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
Tags :