ஆளுநர் இன்று டெல்லிபயணம் அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்கும் பரப்பரப்பு.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையின்போது, தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தது சர்ச்சையானது. ஆளுநருக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதல்வர் வாசித்துக் கொண்டிருக்கும்போதே, ஆளுநர் பேரவையில் இருந்து வெளி யேறினார்.
இதைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு சம்பந்தமாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுகநாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை கடந்த 12-ம் தேதி சந்தித்தனர். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கொடுத்த அவர்கள், பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தனர். இதையடுத்து, கடந்த 13-ம் தேதி டெல்லி சென்ற ஆளுநர்ஆர்.என்.ரவி, 14-ம் தேதி இரவு சென்னை திரும்பினார்.
இதற்கிடையே, திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆளுநரை ஒருமையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் படியாகவும் பேசியது பெரும் சர்ச்சையானது. அவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநர் தரப்பில் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்கப்பட்டது.
இதேபோல், திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட சிலரும் ஆளுநரை ஒருமையில் பேசினர். இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரித்த உளவுத்துறை மத்திய அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பியது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் இன்று டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் ஆளுநர் தமிழக விவகாரம் குறித்து உள்துறை அமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்களை வெளியாகியுள்ளன. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை இரவு ஆளுநர் சென்னை திரும்புகிறார்.
Tags :