ரூ.25 இலட்சம் மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா கடத்தல் வந்த வழக்கில் முக்கிய நபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 15.11.2022-ம் தேதி வாகன சோதனையின் போது லாரியில் 25 இலட்சம் மதிப்புள்ள 100 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்து வந்த வழக்கில் அம்பை ஏ.டி.எஸ்.பி. பல்பீர்சிங் தலைமையிலான அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன், வி.கே.புரம் போலீசார் மற்றும் தனிப்படை காவல்துறையினர் இதுவரை தூத்துக்குடியை சேர்ந்த தளவாய்மாடன், இசக்கிமுத்து, திருவைகுண்டத்தை சேர்ந்த பிரவீன் மற்றும் மருகால்குறிச்சியை சேர்ந்த செல்லதுரை ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து இவ்வழக்கின் முக்கிய எதிரியை அம்பை ஏ.டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் மும்பை மற்றும் ஆந்திரா பகுதிகளுக்கு சென்று எதிரிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் முக்கிய எதிரியான ஆந்திரா மாநிலம், காஜிவாக்காவை சேர்ந்த கலீம் துர்கா பிரசாத் என்பவரை கைது செய்துள்ளனர். காவல் துறையினர் விசாரணையில் மேற்படி எதிரி கடந்த 7 வருடங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கஞ்சாவை சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது. பின் காவல்துறையினர் எதிரியின் வங்கி கணக்கில் உள்ள 8 இலட்சம் ரூபாயை முடக்கம் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தகவல் சேகரித்து எதிரியை கைது செய்த அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான முதல்நிலை காவலர்கள் கணேசன், இசக்கிபாண்டி, மகாராஜன் மற்றும் காவலர் அப்பாதுரை ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் வெகுவாக பாராட்டினார்.
Tags :