ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்ப்பு
இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழும் நாளான ஈஸ்டர் பண்டிகை உலகெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இதை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் விரதம் கடைபிடிப்பார்கள். இதன்அடுத்த நிகழ்வாக ஈஸ்டர் திருநாளுக்கு முந்தைய வியாழன் பெரிய வியாழனாகவும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
ஈஸ்டர் திருநாளையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று இரவு ஏசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. வேளாங்கண்ணி பேராலய கலை அரங்கத்தில் ஈஸ்டர் திருநாள் நடைபெற்ற திருப்பலி தொடக்கத்தில் பாஸ்கா திருவிழிப்புசடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் ‘‘பாஸ்காஒளி’’ யை பேராலய அதிபர் இருதயராஜ் ஏற்றிவைத்தார்.கலை அரங்கவளாகத்தின் மையப்பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய பாதிரியார்கள் அரங்கத்தின் மேடைக்கு எடுத்து சென்றார். அதனைத் தொடர்ந்து பிரார்த்தனைகள் தொடங்கின. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவர் பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இரவு 12 மணிஅளவில் வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கத்தின் மேற்கூரையில் சிலுவைகொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்புதிருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய பங்குதந்தை அற்புதராஜ் உள்ளிட்ட அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.இதேபோல் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலிகளும் ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டர் தினத்தையொட்டி நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.
Tags :