ஸ்டாலினிடம் 165 பக்க ‘நீட்’ பாதிப்பு அறிக்கை நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் நேரில் கொடுத்தார்கள்
பெரும்பாலானோர் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர் என்று நீட் தோ்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க கடந்த மாதம் 10ம் தேதி நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இதுவரை 4 முறை கூடி நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தது. இதுவரை நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 86,342 பேர் ஏ.கே.ராஜன் குழுவிடம் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்தக் குழுவின் ஆய்வறிக்கை 34 நாட்களுக்குப் பின் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம்நேரடியாக ராஜன் குழுவினர் வழங்கியுள்ளனர். மொத்தம் 165 பக்கங்களுடன் முழு அறிக்கையும் முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது.165 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் வந்த கருத்துகள், அதன் தன்மை, பாதிப்புகள், கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களுக்கான பாதிப்புகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாதிப்புகள், பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவோரே நீட் தேர்வில் வெல்லும் நிலை, பெற்றோர், ஆசிரியர், மாணவர் தரப்பில் உள்ள பிரச்சினைகள், ஆதரவு கருத்துகள் உள்ளிட்ட பல அம்சங்களை ஆலோசித்து அதன் சாராம்சங்கள் மற்றும் அரசுக்கு கமிட்டியின் பரிந்துரை எனப் பல அம்சங்களுடன் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வரை சந்தித்தப்பின் நீதிபதி ஏ.கே.ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
“165 பக்கங்கள் கொண்ட அறிக்கை, முழு அறிக்கை அளித்துவிட்டோம். அதில் உள்ள சரத்துகள் பற்றி நான் உங்களிடம் சொல்லக்கூடாது. அதை நீங்கள் அரசிடம் கேட்டுக்கொள்ளலாம். நான் எப்போதும் சொல்வது 2006 கொண்டுவந்த சட்டம் சரியானபடி வாதாடினால் இன்றும் செல்லுபடியாகும் என்று பல முறை சொல்லியிருக்கிறேன்.
முதல்வரிடம் அறிக்கையை அளித்தோம். முக்கியமான சரத்துகளை அவரிடம் தனியாக அளித்தோம். அவர் பார்த்துக்கொண்டார். மற்றப்படி அதுகுறித்து நான் எதையும் சொல்லக்கூடாது. 86 ஆயிரம் கருத்துகள் வந்துள்ளது. பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என்றே கூறியுள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே கூறியிருக்கிறேன்.
முதல் தலைமுறை மாணவர் படிப்பது குறைந்துள்ளது என்பது குறித்து கேட்கிறீர்கள். அது குறித்தெல்லாம் அறிக்கையில் உள்ளது, அறிக்கையில் உள்ள விவரத்தை நான் வெளியில் சொல்லக்கூடாது. 7.5% இட ஒதுக்கீடு குறித்த விவரங்கள் எதையும் நாங்கள் குறிப்பிடவில்லை. அது எங்கள் ஆய்வில் இல்லை. கருத்துகள் அதிக அளவில் வந்தது, அது போதுமானதாக இருந்தது.
அனைத்து அம்சங்களுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டு அளித்துள்ளோம். எங்களது பணிக்காலம் இத்துடன் முடிவடைந்துவிட்டது. ஒரு மாத காலத்தில் அறிக்கை அளிக்கச் சொன்னார்கள் அளித்துவிட்டோம், அத்துடன் எங்கள் வேலை முடிந்துவிட்டது. குழுவின் பணிக்காலமும் முடிந்துவிட்டது.நீட் தேர்வு ஏற்படுத்திய தாக்கம் குறித்து மட்டுமே எங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கச் சொன்னார்கள், எங்களுக்கு கொடுத்த பணியை சரியாக முடித்துவிட்டோம், அதைத்தாண்டி அரசுக்கு எதுவும் நாங்கள் யோசனை சொல்ல முடியாது.
இது பெரும்பான்மை கருத்து என்கிற வாக்குகள் போன்ற ஆய்வு அல்ல, நீட்டினால் என்ன பாதிப்பு, தேர்வு நடத்துவது, நடத்தக்கூடாது, இந்த ஆண்டு மட்டும் நடத்தலாம் என பல்வேறு கருத்துகள் வந்தன, இதைத்தவிர உளவியல், பொருளாதாரம், சட்டப்பிரச்சினை என பல கருத்துகள் வந்துள்ளது.நிறைய விஷயங்களை நாங்கள் அரசுக்கு பரிந்துரையாக அளித்துள்ளோம். மிகுந்த திருப்தியாக உள்ளது. இனி அரசு ஆலோசித்து அவர்கள் முடிவெடுப்பார்கள்”இவ்வாறு நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தார்.
Tags :