பருவநிலை மாற்றத்தால் வேகமாக பரவுகிறது மர்மக் காய்ச்சல்

by Staff / 07-07-2023 04:30:08pm
பருவநிலை மாற்றத்தால் வேகமாக பரவுகிறது மர்மக் காய்ச்சல் சென்னையில் பருவநிலை மாற்றத்தால். காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. அதேபோல ஈக்களால் வாந்திபேதி, காலரா, டைபாய்டு காய்ச்சல் உள்ளிட்ட நோய்ப் பரவல் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சென்னையில் சுட்டெரித்த கோடை வெயில் தணிந்து, 27 ஆண்டுகளுக்கு பின் எதிர்பாராத மழை, ஜூனில் கொட்டி தீர்த்தது. இந்த திடீர், தட்பவெப்ப நிலை மாற்றத்தால், பலருக்கு தொண்டை வலியுடன் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்லும் புறநோயாளிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வகை பாதிப்புகள் சாதாரணமானவையாக இருந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு, பலவிதமான உடல்நல பாதிப்புகள் ஏற்படும். அத்துடன், மழை பொழிவால் 'டெங்கு' காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கொசுக்களை ஒழிக்க, மாநகராட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கொசுக்களை தொடர்ந்து, ஈக்கள் உற்பத்தியும் அதிகரித்து காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் ஈ மயமாக உள்ளது. குப்பை தொட்டிகள் உள்ளிட்ட அசுத்தமான இடங்களில் உட்காரும் ஈக்கள், பழங்கள், மீன், இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களை மொய்ப்பதால், அவற்றை சாப்பிடுவோருக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அமெரிக்கா மருத்துவ துறை நடத்திய ஆய்வு ஒன்றில், ஈக்கள் சராசரியாக, 600 வகையான பாக்டீரியா தொற்றுக்களை பரப்புவதாக தெரிய வந்துள்ளது. இதில், ஆபத்தான பாக்டீரியாக்கள், உணவுகள் வாயிலாக நம் உடலுக்கு செல்லும்போது, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படும். இந்த பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க, உணவுகள், தண்ணீர் ஆகியவற்றில் ஈக்கள் உட்காராமல் பார்த்து கொள்ள வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது குறித்து, அரசு டாக்டர்கள் கூறியதாவது: ஈக்களின் கால்கள், இறக்கைகள், ரோமங்கள் வாயிலாக ஆபத்தான பாக்டீரியாக்களை, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரப்புகின்றன. எனவே, மீன், ஆடு, மாடு மற்றும் பன்றி இறைச்சிகளை நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும். அதேபோல், பழங்கள், காய்கறிகளை நன்றாக அலசியபின் சாப்பிடலாம். முடிந்தவரை ஈக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. சாலையோர கடைகளில் சாப்பிடுவோர், ஈக்கள் இல்லாத கடையாக பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றை கவனிக்க தவறினால், பல்வேறு விதமான நோய் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஒத்துழைப்பு தாருங்கள் சென்னையில் கொசு, ஈக்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தினமும் காலை, மாலை நேரத்தில் மழைநீர் வடிகால் தொட்டி, வடிகால், நீர்நிலைகள் மற்றும் குப்பை தொட்டிகள் இருக்கும் பகுதியில் மருந்து தெளிப்பு, கொசுப்புகை அடித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநகராட்சி நடவடிக்கையைபோல், பொதுமக்களும் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும். - மாநகராட்சி நிர்வாகம்இப்படியும் கட்டுப்படுத்தலாம்! ஈக்களை விரட்ட சிறந்த பொருளாக கற்பூரம் உள்ளது. அதன் நறுமணம் பரவினால், ஈக்கள், இடத்தை காலி செய்து விடும். வீடுகளில் துளசி, ஓமம், புதினா, சாமந்தி ஆகியவற்றை வளர்ப்பது ஈக்களை கட்டுப்படுத்த உதவும். மேலும், யூகலிப்டஸ், லெமன் கிராஸ், லாவெண்டர் ஆகிய எண்ணெய்கள் ஈக்களை விரட்டியடிக்கும். வெள்ளரிக்காய் வாசனையை ஈக்கள் விரும்புவது இல்லை. வீட்டில் சேகரமாகும் குப்பை மேல், வெள்ளரிக்காயை கீற்றாக அறுத்து வைப்பதன் வாயிலாக, ஈக்கள் முட்டை இடுவதையும் தவிர்க்கலாம்.
 

Tags :

Share via