9வது தேசிய கைத்தறி தின விழா
தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு, கைத்தறி கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் 07.08.2023 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, அவர்கள் தகவல்.
2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கைத்தறி தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், கைத்தறித்துறை சார்பில் இந்த ஆண்டு 07.08.2023 அன்று 9வது தேசிய கைத்தறி தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் திண்டுக்கல் மெங்கில்ஸ் சாலையில் உள்ள வி.ஐ.பி. மஹாலில் 07.08.2023-ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கைத்தறி கண்காட்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், வாழை நார் பட்டு சேலைகள், Tie & Dye காட்டன் சேலைகள், பம்பர் காட்டன் சேலைகள் உள்ளிட்ட கைத்தறி ஜவுளி ரகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன. இந்நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு, கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்காக திண்டுக்கல் வி.ஐ.பி மஹாலில் 07.08.2023 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. முகாமில், பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், கண் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதேபோல், நாகல்நகர் பகுதியில் உள்ள செந்தா மஹாலில் இலவச கண் பரிசோதனை முகாம் 07.08.2023 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த வாய்ப்பை நெசவாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags :