விலங்குகள் வெளியேறுவதை தடுக்க உடுமலை வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகள்

by Admin / 08-08-2021 09:44:03pm
விலங்குகள் வெளியேறுவதை தடுக்க உடுமலை வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகள்



   
வன விலங்குகளின் குடிநீர்த்தேவையை கருத்தில் கொண்டு உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில் 12 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளன.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை, அமராவதி, கொழுமம் மற்றும் வந்தரவு வனப்பகுதிகளில் யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள்  உள்ளன. இந்தநிலையில் தண்ணீர் குடிப்பதற்காக உடுமலை-சின்னாறு  சாலையை கடந்து அமராவதி அணைக்கு வன விலங்குகள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.

வன விலங்குகளின் குடிநீர்த்தேவையை கருத்தில் கொண்டு உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில் 12 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளன. சோலார் மின் உற்பத்தி மோட்டார்கள் வாயிலாக குடிநீர் எடுக்கப்பட்டு தொட்டிகளில்  நிரப்பப்பட்டு வருகின்றன. அதோடு காட்டாறுகள், ஓடைகளின் குறுக்கே  நூற்றுக்கணக்கான தடுப்பணைகளும் உள்ளன.
 
தற்போது சிறப்புப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உடுமலை வனச்சரக பகுதியில் ஈசல் திட்டு கிழக்கு மற்றும் கோம்பு மேற்கு பகுதி, அமராவதி வனச்சரகம், கோம்பு கிழக்கு பகுதியில் குடிநீர் தொட்டிகள் கட்டுமான பணி நடந்து வருகிறது.

இப்பகுதிகளில் தலா ரூ.12 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு, சோலார் மின் மோட்டார் மற்றும் பெரிய அளவிலான குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில் சிறுத்தை, யானை,  மான் என ஏராளமான வன விலங்குகள் காணப்படுகின்றன. மழைக்காலங்களில் மலைப்பகுதி பசுமையாக உள்ள போது அடர்ந்த காட்டுப்பகுதிகளில் அவை இருக்கும்.

இருப்பினும் ஆண்டு முழுவதும், சின்னாறு சாலையின் இரு பகுதிகளிலும் வன விலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. அவற்றின் குடிநீர் தேவைக்காக தடுப்பணைகள், மழை காலங்களில் நீரை சேமிக்கும் வகையில் தரைமட்ட தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோடை காலத்திலும் நீர் தேவையை கருத்தில் கொண்டு  வனப்பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு அமைத்து  நீர் வழங்கும் வகையில் 12-க்கும் மேற்பட்ட தொட்டிகள் உள்ளன. தற்போது சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ. 36 லட்சம் செலவில் 3 இடங்களில் வன விலங்குகளுக்கு குடிநீர் தொட்டி கட்டப்படுகிறது.

ஆழ்குழாய் கிணறு அமைத்து யானைகள் அவற்றை சேதப்படுத்தாத வகையில் அகழி வெட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து குடிநீர் தொட்டி மற்றும் சோலார் மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் நீர் இறைக்கும் மோட்டார் அமைக்கும் பணி நடைபெறும் . இவ்வாறு  வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

Tags :

Share via