கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தின் கனிம வளங்கள் கேரளத்தால் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. அதற்காக தென் மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் சட்டவிரோத கல் குவாரிகள் அனைத்தையும் அரசு மூட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இருந்து கல், மண் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கேரளத்துக்கு கடத்தப்படுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. தமிழகத்தின் இயற்கையையும், சூழலையும் சீர்குலைக்கும் இச்செயல்களை தடுக்க அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டம் முதல் நாகர்கோவில் வரை மலைப்பகுதிகளில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளத்துக்கு கடத்தப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டம் கூடங்குளம், இருக்கன் துறை, வள்ளியூர் உள்ளிட்ட இடங்களிலும் கல் உள்ளிட்ட கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, சரக்குந்துகள் மூலம் கேரளத்துக்கு கடத்தப்படுகின்றன. இந்த இரு மாவட்டங்களில் இருந்து மட்டும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன.அதேபோல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்தும் ஜல்லிகள், செயற்கை மணல் உள்ளிட்ட கனிமவளங்கள் சரக்குந்துகள் மூலம் கேரளத்துக்கு கடத்தப்படுகின்றன. இந்த இரு மாவட்டங்களில் இருந்து மட்டும் ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் கூடுதலான லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. சரக்குந்துகளில் எடுத்துச் செல்லப்படும் கனிமவளங்கள் அனைத்துமே சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுபவை ஆகும். இந்த கனிமவளக் கொள்ளையை அனுமதிக்க முடியாது.
தமிழகத்தின் வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவது ஒருபுறமிருக்க, கனிமவள கடத்தல்களால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் எல்லையில்லாதவை. நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கடத்திச் செல்லப்படும் கனிம வளங்கள் மலைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுபவை அல்ல. மாறாக பூமிக்கு அடியில் 100 மீட்டருக்கும் கூடுதலான ஆழத்தில் உள்ள பாறைகளை வெடி வைத்துத் தகர்த்து அதன் மூலம் கிடைக்கும் ஜல்லி உள்ளிட்ட பொருட்களைத் தான் லாரிகள் மூலமாக பலரும் கேரளத்துக்கு கடத்திச் செல்கின்றனர். இந்த நடைமுறை ஆபத்தானது.
பூமிக்கு அடியில் சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால், அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்கின்றன. அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடன் வாழ்கின்றனர். சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கனிமவளங்களை ஏற்றிக் கொண்டு டாரஸ் வகை லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக அணி வகுத்துச் செல்வதால், அவற்றால் விபத்துகள் ஏற்பட்டும், பிறர் மீது மோதியும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சாலைகளில் மக்கள் அச்சமின்றி பயணிக்க முடியவில்லை.
தென் மாவட்டங்களில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல் குவாரிகள் அனைத்தையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட்டது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தென் மாவட்டங்களில் சட்டவிரோத கல் குவாரிகளில் பெரும்பாலானவை எந்தத் தடையும் இல்லாமல் இப்போதும் செயல்பட்டு வருகின்றன. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து கனிமவளங்கள் கடத்தப்படுவது குறித்து அதிகாரிகளுக்கு புகார்கள் கொடுக்கப்பட்டாலும் கூட அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் தமிழகத்தின் கனிமவளம் கேரளத்துக்கு கடத்தப்படும் நிலையில், ஒரு சில லாரிகளை மட்டும் பிடித்து கனிமவளக் கொள்ளையை தடுத்து விட்டதாக காவல்துறையும், அதிகாரிகளும் கூறிக் கொள்கின்றனர். ஆனால், கடத்தல் தொடர்கிறது. அதிகாரிகளின் நடவடிக்கைகள் அனைத்துமே கனிமவளக் கடத்தல்காரர்களுக்கு சாதகமாகவே உள்ளன.
தமிழகத்தின் கனிம வளங்கள் கேரளத்தால் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. அதற்காக தென் மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் சட்டவிரோத கல் குவாரிகள் அனைத்தையும் அரசு மூட வேண்டும். மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் சோதனைச்சாவடிகளை அமைத்து கனிமவளம் கடத்தப்படுவதை தடுக்க நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, கனிம வளக் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டு அதிகாரிகள் அனைவரையும் அடையாளம் கண்டு அவர்கள் மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Tags :