காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை படுகொலை வழக்கில் 4 பேர் கைது

by Staff / 29-08-2023 02:23:32pm
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை படுகொலை வழக்கில் 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால்நடந்தான்குளம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் காளிமுத்து. இவரது மகன் செல்வக்குமார் (வயது 43), கட்டிட தொழிலாளி.இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவர்களுக்கு கார்த்திகா (23), சுதர்ஷினி (19) ஆகிய மகள்கள் உள்ளனர். மர்ம சாவு நேற்று முன்தினம் மொட்டைமாடியில் செல்வக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த குடும்பத்தினர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து செல்வக்குமார் உடலை அடக்கம் செய்ய முயன்றனர். அவரது உடலில் சில காயங்கள் இருந்ததால் உறவினர்கள் கயத்தாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, செல்வக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இந்த வழக்கில் திடீர் திருப்பமாக செல்வக்குமாரை அவரது மனைவி பாக்கியலட்சுமி, மகள்கள் கார்த்திகா, சுதர்ஷினி, பக்கத்து வீட்டைச் சேர்ந்த கந்தவேல் (23) ஆகிய 4 பேரும் சேர்ந்து படுகொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து மர்ம சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி 4 பேரையும் கைது செய்தனர். இதில் கைதான பாக்கியலட்சுமி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், எனது கணவர் செல்வக்குமாருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் தினமும் குடித்து விட்டு தகராறு ெசய்துவந்தார். காதல் விவகாரம் எனது மூத்த மகள் கார்த்திகாவுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கந்தவேல் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த செல்வக்குமார், கார்த்திகாவை கண்டித்தார். மேலும், எனது நடத்தையில் சந்தேகப்பட்டு என்னிடமும் தகராறு செய்து வந்தார். இதனால் நாங்கள் வாழ்வதைவிட சாவதே மேல் என நினைத்து கந்தவேலிடம் கூறினோம். அவரை  நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும், செல்வக்குமாரை கொலை செய்துவிட்டு, தானாக இறந்துவிட்டார் எனக்கூறி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை நம்ப வைத்துவிடலாம் என்று தெரிவித்தார். இந்த சதித்திட்டத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து கந்தவேல் செல்போன் மூலம் எனக்கு வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல் அனுப்பினார். தலையணையால் அமுக்கி. அதன்படி, கடந்த 26-ந் தேதி இரவில் மதுபோதையில் வந்த செல்வக்குமார் உணவு சாப்பிட்டு விட்டு மொட்டைமாடியில் அயர்ந்து தூங்கினார். உடனடியாக கார்த்திகா, கந்தவேலுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரும் எங்களது வீட்டிற்கு வந்தார். பின்னர் நான், எனது மகள்கள் கார்த்திகா, சுதர்ஷினி மற்றும் கந்தவேல் மொட்டை மாடிக்கு சென்றோம். மகள்கள் 2 பேரும் செல்வக்குமாரின் கை, கால்களையும், தலையை கந்தவேலும் பிடித்துக் கொண்டனர். அருகில் கிடந்த தலையணையை எடுத்த நான் எனது கணவர் செல்வக்குமாரின் முகத்தில் வைத்து அமுக்கினேன். அவர் சத்தம் போட்டதால் அருகில் கிடந்த துணியை எடுத்து வாயில் திணித்தோம். இதில் அவர் இறந்து விட்டார். பின்னர் அவரது உடலை போா்வையால் மூடி போட்டுவிட்டு கீழே இறங்கி வீட்டிற்கு வந்துவிட்டோம்.

நேற்று முன்தினம் அதிகாலையில் மொட்டைமாடிக்கு சென்று குடிபோதையில் செல்வக்குமார் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் வந்து, உடலில் லேசான காயம் இருப்பதாக போலீசாரிடம் தகவல் தெரிவித்ததால்.விசாரணையில்  சிக்கிக்கொண்டோம். மேற்கண்டவாறு பாக்கியலட்சுமி வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.கோவில்பட்டி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via