விபத்தில் உயிரிழந்த ஓட்டுனரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த கனரக வாகன ஓட்டுனர் முருகேசன் என்பவர் மீது எதிரில் வந்த கார் மோதியது. கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முருகேசன், கோவை முத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். விபத்தில் காயமடைந்த அவர் இழப்பீடு கோரி ஈரோட்டில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முருகேசன் மரணமடைந்தார். பின் அவரது மனைவி, தாய், குழந்தைகள் இந்த வழக்கை நடத்தி வந்தனர். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், முருகேசன் குடும்பத்தினருக்கு 23 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து 7. 5 சதவீத வட்டியுடன் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து யுனைட்டெட் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை, நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், லட்சுமிநாராயணன் அமர்வு விசாரித்தது. விபத்தில், நுரையீரலில் ஏற்பட்ட ரத்தக்கட்டு காரணமாக முருகேசன் இறந்துள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சாட்சியம் அளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்தனர்.
Tags :