விவசாயி மரணத்துக்கு முதல்வரும் அரசுமே முழு பொறுப்பு: இபிஎஸ்

by Staff / 25-09-2023 05:13:13pm
விவசாயி மரணத்துக்கு முதல்வரும் அரசுமே முழு பொறுப்பு: இபிஎஸ்

குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் மரணத்துக்கான முழு பொறுப்பை திமுக அரசு ஏற்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எம். கே. ராஜ்குமார், சுமார் 15 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தார். குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால், விவசாயக் கடனை எப்படி அடைப்பது என்ற கவலையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், `தான் பெற்ற பிள்ளையை தானே அழிப்பது போல்’, காய்ந்த குறுவை நெற்பயிர்களை விவசாயி ராஜ்குமாரே டிராக்டர் மூலம் அழிக்கும்போது ஏற்பட்ட மனவேதனையில், தன்னுடைய நிலத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். விவசாயி ராஜ்குமாரின் மரணத்துக்கான முழு பொறுப்பை இந்த திமுக அரசும், நிர்வாகத் திறனற்ற முதல்வர் ஸ்டாலினும் ஏற்க வேண்டும். உயிரிழந்த ராஜ்குமாரின் குடும்பத்துக்கு, உடனடியாக 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும்; குறுவை சாகுபடி செய்து பாதிப்படைந்த அனைத்து விவசாய நிலங்களையும் கணக்கிட்டு, ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணத் தொகையாக 35 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via