மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை -பேராசிரியர் செல்போன் மற்றும் லேப்டாப்  பறிமுதல். 

by Editor / 20-10-2023 11:37:20pm
மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை -பேராசிரியர் செல்போன் மற்றும் லேப்டாப்  பறிமுதல். 

குமரி மாவட்டம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேராசிரியர் பரமசிவத்தை நேற்று சிபிசிஐடி போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விராசனை செய்த நிலையில் இன்று மீண்டும் அவரை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் - பரமசிவன் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலசேகரம் மூகாம்பிகா கல்லூரி மருத்துவ மாணவி சுகிர்தா விஷ ஊசி போட்டு கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். சாவுக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம் உட்பட 3 பேர் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார் .அந்த கடிதத்தை கைப்பற்றி குலசேகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  அந்த கடிதத்தில் கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், சீனியர் மாணவர் ஹரிஷ், மாணவி ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் டார்ச்சர் செய்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பேராசிரியர் பரமசிவம், மாணவி  ப்ரீத்தி, சீனியர் மாணவர் ஹரிஷ் ஆகிய 3 பேர் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். 

இதைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி பேராசிரியர் பரமசிவத்தை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. டிஎஸ்பி ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில்  ஹரிஷ் மற்றும் பிரீத்தி ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில்  ஜாமீன் பெற்றனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக  நாகர்கோவிலில் உள்ள 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் விஜயலட்சுமி நேற்று ஒருநாள் காவலில் விட  உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து  போலீசார் பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர் தொடர்ந்து அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் இன்றுடன் ஒருநாள் காவல் முடிவுற்றது அதனை தொடர்ந்து இன்று மாலை மீண்டும் அவரை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை -பேராசிரியர் செல்போன் மற்றும் லேப்டாப்  பறிமுதல். 
 

Tags : பேராசிரியர் செல்போன் மற்றும் லேப்டாப்  பறிமுதல். 

Share via