ரே‌ஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை- அமைச்சர் ஐ.பெரியசாமி

by Admin / 29-07-2021 02:08:11pm
ரே‌ஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை- அமைச்சர் ஐ.பெரியசாமி


   
தமிழகத்தில் 55 ஆயிரம் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்படுவதை ஒரு லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

கோவையில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடந்தது. பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகத்தில் கொரோனா நிவாரணம் பெறாத அனைத்து பயனாளிகளுக்கும் இந்த மாத இறுதிக்குள் நிவாரணம் வழங்கப்படும். கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு நடப்பாண்டு ரூ.11,500 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் ரே‌ஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், பொருள் கட்டிக்கொடுப்பவர்கள் உள்பட அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 55 ஆயிரம் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்படுவதை ஒரு லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குடும்ப அட்டை இல்லாதோர் மனு செய்தால் உடனடியாக 15 நாட்களுக்குள் குடும்ப அட்டைகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைக்காக காத்திருக்க வேண்டிய தேவை தற்போது இல்லை.

அனைத்து விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோர், இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து கடனுதவிகள் வழங்கப்படும். கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் மருந்தகங்கள், தனியார் மருந்தகங்களுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள 4,4451 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெற்றுள்ள விதி மீறல்கள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான தரமான விதைகள், வேப்பம் புண்ணாக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உளளது.

 

Tags :

Share via