மதுரை கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதனை வருமானம் ஒரு கோடியை தாண்டியது பண்டிகை கால அக்டோபர் மாதத்தில் சாதனை

by Staff / 03-11-2023 04:22:43pm
மதுரை கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதனை வருமானம் ஒரு கோடியை தாண்டியது பண்டிகை கால அக்டோபர் மாதத்தில் சாதனை

மதுரை ரயில்வே கோட்டத்தின் அக்டோபர் மாத பயணச்சீட்டு பரிசோதனை வருமானம் ரூபாய் ஒரு கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. பண்டிகை காலமான அக்டோபர் மாதத்தில் ரயில் நிலையங்கள், ரயில்களில் அதிரடி பயணச்சீட்டு சோதனைகள் நடைபெற்றன. இதன் மூலம் மதுரை கோட்டம் பயண சீட்டு பரிசோதனை வருமானமாக ரூபாய் 1,08,12,026  ஈட்டியுள்ளது. பயண சீட்டுகள் இல்லாமலும், குறைபாடு உடைய பயணச்சீட்டுகளை வைத்தும் பயணம் செய்த 15,734 பேர் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயணக்கட்டணத்துடன் அபராதமாக ரூபாய் 1,06,13,680 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவு செய்யாமல் அதிக அளவு உடைமைகளை ரயில்களில் கொண்டு சென்ற 308 பேர் பிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து அபராதமாக ரூபாய் 1,98,346 வசூலிக்கப்பட்டுள்ளது. 


தீ விபத்துகளை தவிர்க்க ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்திய ரயில்வே சட்டம் 1989 -ல் உள்ள பிரிவுகள் 67, 154, 164, 165 ஆகியவற்றின் வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால், குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூபாய் 1000 அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.  தீ விபத்தால் ஏற்படும் நஷ்டம், சேதம், உயிரிழப்பு ஆகியவற்றிற்கும் குற்றவாளி பொறுப்பேற்க நேரிடும். இதற்காக தீபாவளி பண்டிகை நாட்களில்  பயணச் சீட்டு பரிசோதனையை தீவிரமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
. தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் ரயில்களில் அதிக அளவில் பயணிகள் பயணிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த காலத்திலும் நவம்பர் ஐந்து முதல் நவம்பர் 30 வரை சிறப்பு பயண சீட்டு பரிசோதனை நடைபெற உள்ளது. ரயில்களில் பட்டாசு, மண்ணெண்ணெய், எரிவாயு உருளை, பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ரயில்வே பாதுகாப்பு படையும் தீவிர அதிரடி சோதனைகள் நடத்தி வருகிறது.

 

Tags :

Share via