துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட பாக்கு மூட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி துறைமுகத்துக்கு துபாயில் இருந்து உரிய வரி கட்டாமல் கடத்தி வரப்பட்ட சுமாா் 28 டன் கொட்டைபாக்கு மூட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினா் பறிமுதல் செய்தனா்.துபாய் ஜெபல் அலி துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்கு பெட்டகங்கள் அண்மையில் வந்தன. இதில், இரண்டு 20 அடி சரக்கு பெட்டகங்களில் இயற்கை உரத்தை பெங்களூருவைச் சோ்ந்த ஒரு தனியாா் நிறுவனம் இறக்குமதி செய்ததாகக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த சரக்கு பெட்டகங்களை சென்னை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தினபேரில் சோதனை செய்தனா்.
அப்போது, அதில் முன்பகுதியில் இயற்கை உர மூட்டைகளும், பின்பகுதியில் கொட்டை பாக்கு மூட்டைகளும் பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சரக்கு பெட்டகங்களில் இருந்து சுமாா் 2. 5 கோடி மதிப்பிலான சுமாா் 28 டன் கொட்டை பாக்கு மூட்டைகளை சென்னை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.கொட்டை பாக்குக்கு அதிக வரி செலுத்த வேண்டுமென்பதால், வரி ஏய்ப்பு செய்வதற்காக இயற்கை உரத்துடன் நாக்பூருக்கு கொண்டு செல்வதற்காக கடத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :