தூத்துக்குடி துறைமுகத்தில் 3 மின்சார கார்கள்

by Editor / 06-08-2021 08:57:51am
தூத்துக்குடி துறைமுகத்தில்  3 மின்சார கார்கள்

தூத்துக்குடி வஉசி துறைமுக பயன்பாட்டுக்கு மின்சார கார்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி துறைமுக நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் மின்சார கார்கள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். துறைமுக துணைத் தலைவர் பிமல்குமார் ஜா, தலைமை இயந்திர பொறியாளர் வி.சுரேஷ் பாபு, துறைமுக மூத்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். எனர்ஜி எபிசியன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் சவுரப் குமார் காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான எனர்ஜி எபிசியன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் மின்சாரத்தால் இயங்கக் கூடிய 3 கார்களை6 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் வஉசி துறைமுகத்துக்கு வழங்கியுள்ளது. மேலும், வரும் நாட்களில் கூடுதலாக 3 மின்சார கார்களை இந்த நிறுவனத்திடம் வாங்க வஉசி துறைமுகம் திட்டமிட்டுள்ளது.

குத்தகை ஒப்பந்தத்தின்படி இந்த நிறுவனம், வஉசி துறைமுகப்பகுதியில் இக்கார்களுக்கு மின்னூட்டம் செய்வதற்கான மின்னூட்டி நிலையங்கள் (சார்ஜிங் பாயின்ட்) அமைப்பது, வாகனக் காப்பீடு, வாகனத்துக்கான போக்குவரத்து ஆணைய பதிவு, அதற்கான ஓட்டுநர்களை நியமித்தல் மற்றும் வாகனங்களின் பராமரிப்பு போன்றவற்றை மேற்கொள்ளும்.

இக்கார்களை மின்னூட்டம் செய்வதற்கான கட்டணத்தை தவிர்த்து, அந்த நிறுவனத்துக்கு கட்டணமாக மாதம் தோறும் ரூ.40 ஆயிரம் செலுத்தப்படும்.

இந்த மின்சார கார்களில் 21.50 கிலோ வாட் லித்தியம் அயன் பேட்டரிகள் உள்ளன. இவற்றை ஒருமுறை முழுமையாக மின்னேற்றம் செய்தால் 231 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். இந்த பேட்டரி ஏசி மின்னூட்டி (சார்ஜர்) மூலம் மின்னேற்றம் செய்யப்படும். இந்த மின்னூட்டி மூலம் ஒரே நேரத்தில் 3 கார்களுக்கு மின்னேற்றம் செய்யமுடியும். இந்த மின்னூட்டி அமைப்பானது 8 மணி நேரத்தில் முழுமையாக மின்னேற்றம் அடைந்துவிடும். ஒவ்வொரு மின்சார வாகனமும் ஆணடுக்கு 1.5 டன் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும்.

தூத்துக்குடி- திருநெல்வேலி மற்றும் மதுரை சாலை வழித்தடங்களில் பெருநிறுவன சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் மின்சார கார்கள் இயக்கத்தை மேம்படுத்த வஉசி துறைமுகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மின்சார கார் உரிமையாளர்கள் மற்றும் வாடகை கார் இயக்குபவர்களின் வசதிக்காக, அரசு வாகன நிறுத்துமிடங்கள், ரயில் நிலையங்களின் பார்க்கிங் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் சிறப்பு மின்னூட்டி நிலையங்களை அமைக்கவுள்ளது.

 

Tags :

Share via