கோவில்களில் ஆடி அமாவாசை,  ஆடிப்பூர நாட்களில் பக்தர்கள் வர தடை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

by Editor / 07-08-2021 03:42:12pm
கோவில்களில் ஆடி அமாவாசை,  ஆடிப்பூர நாட்களில் பக்தர்கள் வர தடை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு



இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பூர நாட்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் 23 ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆலயங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. நிறைய பக்தர்கள் ஆலயத்துக்குள் செல்ல முடியாததால் வெளியில் வாசலில் நின்று வழிபட்டு சென்றனர்.இந்த நிலையில் நாளை ஆடி அமாவாசைக்கான வழிபாடுகள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளன. கடலோர பகுதிகளிலும், ஆலயங்கள் அருகில் உள்ள நீர்நிலை பகுதிகளிலும் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பெரிய அளவில் நடைபெறும்.


இதேபோன்று வருகிற 11ந் தேதி ஆடிப்பூரம் வருகிறது. அன்றைய தினம் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் திரள வாய்ப்பு உள்ளது.கொரோனா பரவல் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு
ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் ஆகிய இரு நிகழ்ச்சிகளுக்கும் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்து உள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசை மற்றும் 11ந் தேதி (புதன்கிழமை) ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது.இந்நாட்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும்.இவ்வாறு பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.

 

Tags :

Share via