கிராம உதவியாளரை காலில் விழ வைத்த அதிர்ச்சி சம்பவம் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு

கோவையில் கிராம உதவியாளரை காலில் விழ வைத்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்தின் ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் (விஏஓ) உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக முத்துசாமி (56) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த கோபால்சாமி என்பவர், தனது சொத்து விவரங்களைச் சரிபார்ப்பு விஷயங்களுக்காக, விஏஓ அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது, விஏஓ கலைச்செல்வி, கோபால்சாமியிடம் சரியான ஆவணங்கள் இல்லை என்றும், முறையான ஆவணங்களைக் கொண்டு வாருங்கள் என்றும் கூறியிருக்கிறார்.
அப்போது கோபால்சாமிக்கும், விஏஓக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது உதவியாளர் முத்துசாமி குறுக்கிட்டு அரசு அலுவலர்களிடம் தவறாகப் பேச வேண்டாம் என்று கூறி சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.இதையடுத்து கோபால்சாமி, முத்துசாமியை மிரட்டியதுடன், ஊரில் இருக்க முடியாது, பொய்புகார் கூறி வேலையை காலி செய்துவிடுவேன் என சாதிப்பெயரை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார்.
இந்த மிரட்டலால் அதிர்ச்சி அடைந்த உதவியாளர் முத்துசாமி, மேஜை மீது அமர்ந்திருந்த கோபால்சாமி முன் தரையில் காலில் விழுந்து கதறி அழுதபடி மன்னிப்பு கேட்டுள்ளார். அருகிலிருந்த விஏஒ கலைச்செல்வி உள்ளிட்டோர், காலில் விழுந்த முத்துசாமியை சமாதானப்படுத்தி எழுப்ப முயன்றனர். ஆனால் கோபால்சாமி ஒன்றும் கூறவில்லை. பின்னர் முத்துசாமி எழுந்தார்.இந்த சம்பவத்தை அந்த அலுவலகத்தில் இருந்த ஒருவர் யாருக்கும் தெரியாமல் வீடியோவாக எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நிகழ்ந்த சாதிக் கொடுமை குறித்து விஏஓ அலுவலகத்துக்கு ஆர்.டி.ஓ. நேரில் சென்று விசாரிக்க மாவட்ட வருவாய் அலுவலர் லீலா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், காலில் விழ வைத்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறை வழக்குப்பதிவு செய்து, தெளிவான அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மற்றும் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவத்திற்கு பல்வேறு சமூக ஆர்வலர்களும், அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Tags :