ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க உத்தரவு

by Staff / 25-05-2024 04:48:08pm
ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மகன் பென்னிக்ஸ். இருவரும் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்தனர். கடந்த 19. 6. 2020-ல் கரோனா காலத்தில் ஊரடங்கு நிபந்தனையை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் என 9 பேரை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது 2427 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இதுவரை 60-க்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கணவர் பென்னிக்ஸ் கொலை வழக்கை விரைந்து முடிக்கக்கோரி அவரது மனைவி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை 3 மாதத்தில் விசாரணை செய்து முடிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ கண்காணிப்பாளரிடம் மட்டும் சாட்சி விசாரணை மீதமுள்ளது. பிற சாட்சிகள் விசாரணை முடிந்து விட்டது என சிபிஐ வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via