கப்பலூர் டோல்கேட் முற்றுகை போராட்டம்: பேச்சுவார்த்தை தோல்வி மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

by Staff / 10-07-2024 02:03:28pm
கப்பலூர் டோல்கேட் முற்றுகை போராட்டம்: பேச்சுவார்த்தை தோல்வி மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு  போராட்டம்

கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருமங்கலம் கோட்டாட்சியர் சாந்தி மற்றும் தேசிய‌நெடுஞ்சாலை போக்குவரத்து திட்ட அதிகாரி பரத்வாஜ்  பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை ஒட்டி மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் கோஷம் எழுப்பி வருகின்றனர்.கப்பலூர் டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றக்கோரியும், உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் 50 சதவீதம் கட்டணம் வசூல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருமங்கலம் தொழிற்சாலை அதிபர்கள், கிரபம மக்கள், வாகன ஓட்டிகள் என முன்னாள் அமைச்சர் ஆர்பிஉதயகுமார் தலைமையில் காலை முதல் சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டம்  நடைபெற்று வந்தது.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித சமரசமும் எட்டப்படாத நிலையில் கப்பலூர் அருகே உள்ள திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சாந்தி, தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட அதிகாரி பரத்வாஜ்  மற்றும்  சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் மற்றும் உள்ளூர் மக்கள்   பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

பேச்சு வார்த்தையில் எழுத்து மூலம் உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக கூறினர். அதற்கு அதிகாரிகள் உடன்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைவரும் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.கப்பலூர் சுங்கச்சாவடியிலும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் வரிசையாக நிற்கின்றன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via