ஐ.பி.எல்: மும்பை அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

by Editor / 20-09-2021 04:37:32pm
ஐ.பி.எல்: மும்பை அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்


துபாயில் நடந்த ஐ.பி.எல். 2வது கட்ட போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன் அணியை 20 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.


இதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்காக ருதுராஜ் மற்றும் டு பிளிசிஸ் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கம் சென்னை அணிக்கு அதிர்ச்சியை அளித்தது. டு பிளெஸ்ஸி ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் பந்து வீச்சில் மில்னியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்து வந்த மொயீன் அலியும் ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்திலேய வெளியேற சிஎஸ்கே 1.3 ஓவரில் 2 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்தது.


அம்பத்தி ராயுடு ரன் ஏதும் எடுக்காத நிலையில் காயம் காரணமாக பெவிலியன் திரும்ப, நெருக்கடி மேலும் அதிகரித்தது. அடுத்து வந்த ரெய்னா 4 ரன், தோனி 3 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். சென்னை அணி 6 ஓவரில் 24 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ருதுராஜ் - ஜடேஜா இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அபாரமாக விளையாடிய ருதுராஜ் அரை சதம் அடித்து அசத்தினார். ருதுராஜ் - ஜடேஜா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தது. ஜடேஜா 26 ரன் எடுத்து (33 பந்து, 1 பவுண்டரி) அவுட்டானார். அடுத்து வந்த பிராவோ அதிரடியில் இறங்கி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். போல்ட் வீசிய 19வது ஓவரில் மட்டும் சென்னை அணிக்கு 24 ரன் கிடைத்தது. 8 பந்துகளில் 23 ரன் அடித்த பிராவோ அவுட்டாகி வெளியேறினார்.


பிராவோ 23 ரன் (8 பந்து, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். பும்ரா வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தை ருதுராஜ், தோனி பாணியில் சிக்சருக்கு தூக்கி அடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் குவித்தது. ருதுராஜ் 88 ரன் (58 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), தாகூர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் போல்ட், மில்னி, பும்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பில் குயிண்டான் டி காக் மற்றும் அன்மோல்பிரித் சிங் ஆகியோர் களமிறங்கினர். டி காக் 17 (12) ரன்களும், அவரைத்தொடர்ந்து அன்மோல்பிரித் சிங் 16 (14) ரன்களும், சூர்யகுமார் யாதவ் 3 (7) ரன்களும், இஷான் கிஷன் 11 (10) ரன்களும், கேப்டன் பொல்லார்டு 15 (14) ரன்களும், குருணால் பாண்ட்யா 4 (5) ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மில்னே 15 (15) ரன்களும், அடுத்து களமிறங்கிய ராகுல் சாஹர் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுரவ் திவாரி 50 (40) ரன்களும், பும்ரா 1(2) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஒவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. சென்னை அணியின் சார்பில் பிராவோ 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது ருதராஜ்க்கு வழங்கப்பட்டது.

 

Tags :

Share via