சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை : 3 பேர் கைது.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்பாண்டி.இவர் சிவகாசியில் மெக்கானிக்காக வேலை செய்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்த சிவகாசி பகுதியைச் சேர்ந்த நந்தினி(22) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாறி இருக்கிறது. இருப்பினும், இவர்களின் காதலைப் பெண் வீட்டார் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் அய்யம்பட்டி பகுதியில் தனியாக வீடு எடுத்து தனியாகத் தங்கியுள்ளனர்.
நந்தினி சிவகாசி ஹவுசிங் போர்டு அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இதற்கிடையே நேற்றிரவு பணியை முடித்த நந்தினியை அழைத்துச் செல்ல அங்கே கார்த்திக் பாண்டி வந்துள்ளார். அப்போது திடீரென அங்கு பைக்கில் வந்த மூன்று பேர் கார்த்திக் பாண்டியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த போலீசார் கார்த்திக் பாண்டி உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக இன்று காலை நந்தினி சகோதரர் பாலமுருகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இப்போது போலீசார் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். காதல் திருமணம் செய்த இளைஞரைப் பெண்ணின் சகோதரர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை : 3 பேர் கைது.