மதுரை நியோ மேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் 129வது குற்றவாளி கைது.
மதுரை நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் 129வது குற்றவாளியான சரவணசுந்தரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மதுரை எஸ்.எஸ்.காலனியில் இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி முதலீடு பெற்று மோசடி செய்தது. இந்நிறுவனத்தின் இயக்குநர்கள், துணை நிறுவன இயக்குநர்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முக்கிய குற்றவாளிகளான நியோ மேக்ஸ் இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று டி.எஸ்.பி., மணீஷா தலைமையிலான போலீசார், நேற்று மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்த சரவணசுந்தரை 48, கைது செய்தனர். இவர் நியோ மேக்ஸ் துணை நிறுவனமான நியோஸ்கோ டெவலப்பர்ஸ் இயக்குநராக இருந்து மக்களிடம் ரூ.10 கோடி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டார். இந்நிறுவனம் முதலீட்டாளர்களிடம் மொத்தம் ரூ.50 கோடி வரை மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags : மதுரை நியோ மேக்ஸ் நிதிநிறுவன மோசடி



















