தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்:  தனித்தீவாக மாறிய விழுப்புரம் கிராமங்கள்!

by Editor / 02-12-2024 09:20:24pm
தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்:  தனித்தீவாக மாறிய விழுப்புரம் கிராமங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து 1,68,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணை, கோரையாற்றில் வெள்ளம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 50 திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவாக மாறி உள்ளன.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறி நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ,கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 56 செ.மீ அளவிற்கு அதி கனமழை கொட்டித் தீர்த்தது. அதேபோல் வானூர், மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் 40 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. விழுப்புரத்தில் வரலாறு காணாத மழைப் பொழிவை அடுத்து, மாவட்டம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. குடியிருப்புப் பகுதிகளை பெருமளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அத்தியாவசிய தேவைக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

வீடுகளின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், இருச்சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதோடு, வாகனங்களும் மூழ்கியதால் பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து 1,68,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள, பேரங்கியூர், இருவேல்பட்டு, காரப்பட்டு, ஏமப்பூர் சிவானூர், ஏனாதிமங்கலம் உள்பட 50 திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள 50 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் சுமார் ஐம்பதாயிரம் ஏக்கருக்கு மேலாக சம்பா சாகுபடிக்காக நடவு செய்யப்பட்டிருந்த நெல் பயிர்கள், கரும்பு மற்றும் வாழை வெள்ள நீரால் அடித்து செல்லப்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் நிரீல் மூழ்கிய நெல் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் இதனால் கடுமையாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் உடனடியாக அரசு அதிகாரிகள் இதனை பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் ஒரு கோரிக்கை வைக்கின்றனர்.

 

Tags : தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்:  தனித்தீவாக மாறிய விழுப்புரம் கிராமங்கள்!

Share via