கார்த்திகை தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை -அமைச்சர் சேகர்பாபு 

by Editor / 11-12-2024 10:07:48pm
கார்த்திகை தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை -அமைச்சர் சேகர்பாபு 

திருவண்ணாமலை மாவட்டம் வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டதில் வீட்டில் இருந்த 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதையடுத்து புயல், மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். இதற்கிடையே அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கார்த்திகை தீபத்திருவிழாவினை ஒட்டி திருவண்ணமலை வரும் பக்தர்கள் மகாதீபம் ஏற்றப்படும்போது மலை மீது ஏற அனுமதி கிடையாது என்றார். திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவை தொடர்ந்து புவியியல், ஆணையாளர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய அறிவிப்பை வெளியிடுவார்.

தீபத்திற்காக 4,500 கிலோ நெய் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து பரணி தீபத்தை காண 6,300 பேருக்கும் மகாதீபத்தை காண 11,600 பேருக்கும் அனுமதி தரும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார். மேலும் கொப்பரை, நெய் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தேவையான ஆட்கள் மட்டுமே மலைமீது செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
 

 

Tags : கார்த்திகை தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை -அமைச்சர் சேகர்பாபு 

Share via