சிதிலமடைந்த வீட்டில் வசித்த பெண்ணின் கோரிக்கையை ஏற்று பட்டா மாறுதல் ஆணையை வழங்கிய அமைச்சர்.

by Editor / 05-01-2025 11:20:07am
சிதிலமடைந்த வீட்டில் வசித்த பெண்ணின் கோரிக்கையை ஏற்று பட்டா மாறுதல் ஆணையை வழங்கிய அமைச்சர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்தில் அமைந்துள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அப்போது அப்பகுதியில் வசித்துவரும் ராணி என்பவர் தான் வசித்து வரும் வீடு மிகவும் சேதமடைந்து உள்ளதால் தனக்கு உதவும்படி கேட்டு கொண்டார்.

குறிப்பாக, மேற்கூரையில் போடப்பட்டுள்ள ஓடுகள் இறங்கியிருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே விழுவதால் உறங்க வழியின்றி தவிக்கின்றோம். இதனால் மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் அங்கு வசிப்பது ஆபத்தாக இருப்பதாகக் கூறினார். 

அவரது வீட்டிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டார். அவர் கூறியது போல மிகவும் சிதிலமடைந்த வீட்டில் போதிய அடிப்படை வசிதியின்றி குழந்தைகள், முதியவர் என 5க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வந்தனர். 

இதையடுத்து அவருக்கு கலைஞர் கனவுத் திட்டத்தின் கீழ் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். இந்நிலையில் இதனை உறுதிசெய்யும் விதமாக ராணிக்கு அவர் வசித்துவரும் வீட்டின் பட்டா  மாறுதல் ஆணையினை முதற்கட்டமாக அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வழங்கினார். தொடர்ந்து கலைஞர் கனவுத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.

 

Tags : சிதிலமடைந்த வீட்டில் வசித்த பெண்ணின் கோரிக்கையை ஏற்று பட்டா மாறுதல் ஆணையை வழங்கிய அமைச்சர்..

Share via