மேலூர் டங்ஸ்டன் சுரங்க அனுமதி ரத்து ;விவசாயிகள் இனிப்புகள் வழங்கி  பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்.

by Editor / 23-01-2025 11:20:02pm
மேலூர் டங்ஸ்டன் சுரங்க அனுமதி ரத்து ;விவசாயிகள் இனிப்புகள் வழங்கி  பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்.

மதுரை மாவட்டம் மேலூர்  அருகே உள்ள அரிட்டாபட்டி வல்லாளப்பட்டி நாயக்கர் பட்டி உள்ளிட்ட சுமார் 11 கிராமங்கள் உள்ளடக்கிய சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கத்தை கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து மேலூர் முழுவதும் உள்ள பொதுமக்கள் விவசாயிகளும் அதனை கொண்டாடி வருகின்றனர்.

 இந்நிலையில் சுரங்கத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி கடந்த 7 ஆம் தேதி மேலூர் முல்லைப் பெரியாறு ஒருபோக  பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மேலூர் நரசிங்கம்பட்டியில் இருந்து மதுரை தல்லாகுளம் வரை நடை பயணமாக சென்று மாபெரும் கண்டன கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக சுரங்க அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து முல்லைப்பெரியாறு ஒருபோக பாசன விவசாய சங்கத்தினர் மேலூர் மூவேந்தர் பண்பாட்டு கழகத்திலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் நடை பயணமாக மேலூர் காவல் தெய்வம்மான காஞ்சிவனம் கோயிலுக்கு சென்று அங்கு வழிபாடு நடத்திவிட்டு மேலூர் பேருந்து நிலையம் முன்பாக இருந்த பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 இரண்டு மாத காலங்களாக மேலூர் பகுதியில் பெரும் அச்சத்தை  ஏற்படுத்தி வந்த டங்ஸ்டன் சுரங்க விவகாரம் மத்திய அரசின் சுரங்க அனுமதி ரத்து என்ற செய்தியை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வில் நிம்மதியான மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : மேலூர் டங்ஸ்டன் சுரங்க அனுமதி ரத்து ;விவசாயிகள் இனிப்புகள் வழங்கி  பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்.

Share via