மக்கள் அதிகம் வசிக்கும் தெருவில் வாலிபர் ஓட ஓட வெட்டி படுகொலை.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாங்குடி கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் என்பவரின் மகன் சந்துரு (20) என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து பின்னர் குடும்பத்தினர் அனுமதி உடன் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் அவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படும் நிலையில் நேற்று 6-ம் தேதி இரவு அவர் அண்ணாநகர் பகுதியில் அவர் வேலை செய்வதற்கான கூலி பணத்தை வாங்க அதே பகுதியை சேர்ந்த பேச்சி என்பவரது வீட்டிற்கு வெளியே நின்று பணத்தை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் சந்துருவை நோக்கி பயங்கர ஆயுதங்களுடன் வேகவேகமாக ஓடி வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சந்துரு உயிர் பயத்துடன் மக்கள் வசிக்கும் அண்ணாநகர் பகுதியில் வேகமாக ஓடினார். தொடர்ந்து அங்கிருந்த பேச்சியின் வீட்டிற்குள் உயிர் பயத்துடன் ஓடிய நிலையில் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சென்று பேச்சியின் வீட்டிற்குள் வைத்து சந்துருவின் முகத்தை கொடூரமாக சிதைத்து படுகொலை செய்து விட்டு அங்கிருந்து வேக வேகமாக தப்பி ஓடினர். தொடர்ந்து அவரின் அலறல் சுற்றும் கேட்டு அக்கம் பக்கத்தில் திடீரென அங்கு வந்து திரண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் மற்றும் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதிர் தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணையை முடுக்கி விட்டனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த விதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் தூத்துக்குடி மோப்ப நாய் "கோகோ" வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடிக்கப்பட்டு விசாரணை நடந்தது. சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வேக வேகமாக ஓடிய மோப்ப நாய் நாகர்கோவில் சாலையில் ஒரு முக்கிய ஆதாரத்தை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வாலிபரை ஓட ஓட விரட்டி 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : சாத்தான்குளத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் தெருவில் வாலிபர் ஓட ஓட வெட்டி படுகொலை.