மத்திய, மாநில அரசுகளை குறை கூறியுள்ளார் விஜய் – அண்ணாமலை

கோவையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “விஜய், தனது கட்சியின் ஆண்டு விழாவில் மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை சொல்லியிருக்கிறார். ஏன் எல்கேஜி மாணவர்கள் போல சண்டையிட்டுக் கொள்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
விஜய் என்ன பேசுகிறாரோ அதனை முதலில் அவர் பின்பற்ற வேண்டும். உங்கள் குழந்தைக்கு மட்டும் 3 மொழிகள், உங்கள் பள்ளியில் 3 மொழி கற்பிக்கிறீர்கள், ஆனால் தவெக தொண்டர்களின் குழந்தைகளுக்கு மட்டும் 2 மொழியா? விஜய் சொல்வதை அவர் முதலில் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறேன்.நீங்கள் ஏன் பொய் சொல்கிறீர்கள்? மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? விஜய் ‘கெட் அவுட் கையெழுத்து இயக்கம் ஆரம்பித்தார். ஆனால், தேர்தல் ஆலோசனை சொல்லும் பிரசாந்த் கிஷோர் ‘நான் கெட் அவுட்’ என சொல்லிவிட்டு கையெழுத்திடாமல் சென்றுவிட்டார்.அந்த நடவடிக்கைக்கு என்ன மரியாதை என பிரசாந்த் கிஷோரே காண்பித்துவிட்டார். எங்கும் யாரும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. திருச்சியில் மார்ச் 22ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறோம். அந்த கூட்டத்தைப் பாருங்கள். திமுகவைவிட ஒருபடி மேலாக நாங்கள் பேசுவோம். அவர்கள் பாணியிலே அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்.பிகாரில் இருந்து வந்த ஒருவருக்கு தமிழ்நாட்டில் மரியாதை கிடைப்பது மகிழ்ச்சிதான். ஆனால் அவருக்கு ஒரே ஒரு கேள்வி, ஏன் அரசியல் ஆலோசனை தந்து திமுகவை ஏன் ஆட்சியில் அமர வைத்தீர்கள் என்று கேட்கிறேன். அதற்காக தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் உங்களை மன்னிக்கமாட்டார்கள்.நல்லது செய்தால் யாருக்கு வேண்டுமானாலும் தமிழ்நாட்டு மக்கள் மரியாதை அளிப்பார்கள். வருங்காலங்களில் ஒருமித்த கருத்தோடு யார் வந்தாலும் நாங்கள் இணைந்து பயணிக்க தயார். விஜய் கட்சி ஆண்டு விழாவில் செய்தியாளர் மீதான தாக்குதலை வன்மையான கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Tags :