திருவண்ணாமலையில் சாலையோரம் போன் பேசிக்கொண்டு இருந்த கார் டிரைவர் குத்தி கொலை.

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட சாரோன் அருகே உள்ள வேல் நகரை சேர்த்தவர் தட்சிணாமூர்த்தி மகன் சீனிவாசன்( வயது 38). திருமணம் ஆகாத இவர் கார் டிரைவராக பணிபுரிகிறார். இவர் இன்று இரவு சுமார் 8.15 மணி அளவில் சாரோன் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அருகாமையில் அமர்ந்து கொண்டு போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிவாசனை சரமாரியாக குத்தி விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த சீனிவாசன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த நிலையில் பொதுமக்கள் திருவண்ணாமலை நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சீனிவாசனின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தப்பி ஓடிய 3 நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் கொலை நடந்த பகுதியில் மாவட்ட எஸ்பி சுதாகர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இந்த கொலை சம்பவம் என்ன காரணத்தினால் நடந்தது, இவர்களுக்குள் ஏதேனும் முன் விரோதம் இருந்து வந்ததா? அல்லது அடையாளம் தெரியாமல் வேறு நபருக்கு பதில் சீனிவாசனை கொலை செய்துள்ளனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Tags : திருவண்ணாமலையில் சாலையோரம் போன் பேசிக்கொண்டு இருந்த கார் டிரைவர் குத்தி கொலை...