சாத்தான்குளம் அருகே காவலரின் தாய் கொலை இளம்பெண் கைது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிப்பனை சிஎஸ்ஐ கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி வசந்தா(70). ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர். இந்த தம்பதியினருக்கு சபிதா என்ற மகளும் வினோத், விக்ராந்த் என்ற மகன் மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். சபிதா, வினோத் கோயம்புத்தூரிலும், காவலரான விக்ராந்த் சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதுடன் குடும்பத்துடன் அருகேயுள்ள ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வசந்தா இருந்த வீடு நேற்று மதியத்துக்கு பிறகு நீண்ட நேரமாக பூட்டி கிடந்துள்ளது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரது வீட்டை பார்க்கும் போது வழக்கத்திற்கு மாறாக வீட்டின் ஜன்னல்கள் கதவுகள் பூட்டப்பட்டு கிடந்ததையடுத்து அவரது மகனான போலீஸ்காரர் விக்ராந்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அவர் தொடர்ந்து தாயின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து அவரது உறவுக்கார பையன் ஒருவனிடம் ஆனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் சாவியை வாங்கி வந்து திறந்து பார்க்கும் படி கூறியுள்ளார்.
அப்போது வீட்டின் கதவுகள் உள்பக்கம் பூட்டி இருந்த நிலையிலிருந்து உள்ளது. இதனால் திறக்க முடியாத நிலையில் வீட்டில் பின் பக்கமாக சென்று பார்த்தபோது கதவு திறந்து நிலையில் கிடந்துள்ளது. இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வசந்தா இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து மகனான விக்கிராந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வசந்தா கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச் செயின் அறுத்து எடுக்கப்பட்ட நிலையில் கம்மல்களை கழற்றி எடுத்து சென்றுள்ளனர்.
இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் டிஎஸ்பிக்கள் சாத்தான்குளம் சுபகுமார், திருச்செந்தூர் மகேஷ் குமார், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் ஜியா வரவழைக்கபட்டது. மோப்பநாய் வீட்டிலிருந்து வந்து தெருக்களில் சென்று நின்று விட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் செல்வரதி (24) என்பவர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுவது தெரியவந்தது.
கொலை செய்த செல்வரதி தனது கணவரின் சொந்த ஊரான மீரான்குளத்தில் இருந்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இரண்டாவது குழந்தை பிறந்ததற்காக செல்வரதி சொந்த ஊரான தேரிப்பனைக்கு வந்துள்ளார். நேற்று யாரும் இல்லாத நேரத்தில் பின்வாசல் வழியாக சென்று முன்பக்க கதவு மற்றும் ஜன்னலை அடைத்து விட்டு அருகே இருந்த கட்டிலில் படுத்து கிடந்த வசந்தாவை தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் செயின் மற்றும் கம்மலை திருடி சென்றுள்ளார்.
நேற்று இரவே போலீசார் கணவரின் சொந்த ஊரான மீரான்குளத்தில் பதுங்கி இருந்த செல்வரதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டது.
ஏற்கனவே இந்த இளம்பெண் செல்வ பாரதி கடந்த 2015ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின் வீட்டிற்கு சென்று பணத்தை திருடியுள்ளார். இது குறித்து அந்த மூதாட்டி அந்த கிராமத்தில் உள்ள அனைவரது வீட்டிற்கும் சென்று செல்வரதி தனது வீட்டில் பணத்தை திருடியதாக கூறி அனைவருக்கும் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வரதி அந்த மூதாட்டியின் பேரன் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சிறுவனை கடத்தி கிணற்றில் தள்ளி கொலை செய்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் மீது வெளி மாவட்டங்களிலும் திருட்டு குறித்த வழக்கு பதிவு செய்து விசாரணையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சாத்தான்குளம் அருகே நகைக்காக இளம்பெண் காவலரின் தாயை தலையணையால் அமுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags : சாத்தான்குளம் அருகே காவலரின் தாய் கொலை இளம்பெண் கைது.