திருநெல்வேலி மாவட்ட கனிம வள முறைகேடு எதிரொலி: அதிகாரிகள் சஸ்பெண்ட், இடமாற்றம்

by Editor / 17-05-2025 05:08:09pm
திருநெல்வேலி மாவட்ட கனிம வள முறைகேடு எதிரொலி: அதிகாரிகள் சஸ்பெண்ட், இடமாற்றம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் போலியான நடைசீட்டுகளை பயன்படுத்தி அதிக அளவில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாகவும், விதிமுறைகளை மீறி கேரளாவிற்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, மதுரை மண்டல கனிம வள இணை இயக்குனர் ஆர்.ஜே.டி. சட்டநாதன் தலைமையிலான குழுவினர் நெல்லை கனிம வள அலுவலகத்தில் இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில், சுமார் 40 கிரஷர்களுக்கு நடைசீட்டு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை மண்டல இணை இயக்குனர் சட்டநாதன் அளித்த அறிக்கையின் அடிப்படையில், உதவி புவியியலாளர் சேகர் மற்றும் உதவியாளர் சொர்ணலதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், டைப்பிஸ்ட் ஈஸ்வரி, இளநிலை உதவியாளர் காசிராஜன் மற்றும் டிரைவர் ரமேஷ் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் பாலமுருகன் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட கனிம வளத்துறை இயக்குனர்ரமேஷ்  நெல்லை மாவட்ட கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்த அதிரடி நடவடிக்கைகள் கனிம வளத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், விதிமீறல் குவாரிகள் மற்றும் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள விதிமுறை மீறிய குவாரிகளை கண்டறிந்து, ட்ரோன் மூலம் ஆய்வு செய்து உண்மை நிலவரங்களை கண்டறிய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுகுறித்து கல் குவாரி மற்றும் கிரஷர் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், பொதுமக்களிடம் தரப்பில் பேசிய போது, நடைச்சீட்டு வழங்கும் நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைனில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டதில் இருந்து, உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டு வருவதாகவும், தயார் செய்யப்பட்ட கிரஷர் கற்களை விநியோகம் செய்வதற்கான நடைச் சீட்டுகளும் அது குறித்த ஓடிபி எண்களும் ஆன்லைன் முறையில் கிடைப்பது தொழில்நுட்ப காரணங்களால் மிகுந்த  காலதாமதம் ஆவதாகவும் எனவே எப்படி என்றாலும் ஓடிபியும் நடைச்சீட்டும் சென்னையில் இருந்து கிடைத்துவிடும் என்ற அடிப்படையில் கனிமவள பொருட்களை தாங்கள் ஆர்டர் கொடுத்த நிறுவனங்களுக்கும் கட்டுமான பணி மேற்கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கும் அனுப்பி வருவதாகவும், எனவே விநியோகத்தில் முறைகேடாக இதுபோல் கொண்டு செல்லப்படுவதாக தோற்றம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். ஆன்லைன் தொழில்நுட்ப கோளாறினால் இது போன்ற நிகழ்வுகள் தமிழகம் முழுவதுமே தற்போது ஏற்பட்டு இருப்பதாகவும் திருநெல்வேலி திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இந்த நடை சீட்டு விவகாரம் தற்போதைய தீவிரம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை சரி செய்தால் மட்டுமே இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்றும் அரசுக்கும் உரிய வருமானம் கிடைக்கும் என்றும் கிரஷர் ஜல்லி பொருள்களின் விலை ஏற்றம் கட்டுக்குள் இருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. மூத்த அமைச்சர் துரைமுருகனிடமிருந்து தற்போது அமைச்சர் ரகுபதிக்கு கனிமவளத்துறை பொறுப்பு வழங்கப்பட்டதிலிருந்து இதுபோன்ற சோதனைகள் தீவிரமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : திருநெல்வேலி மாவட்ட கனிம வள முறைகேடு எதிரொலி: அதிகாரிகள் சஸ்பெண்ட், இடமாற்றம்

Share via