தொழுவத்தில் திடீர் தீவிபத்து.. 14 ஆடுகள் கருகி பலி
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள மஞ்சநம்பிகிணறு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சண்முகராஜ் (31). விவசாயி. மேலும் இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் வீடு அருகில் தொழுவம் அமைத்து 35 ஆடுகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று பகல் சுமார் 11 மணியளவில் சோளத்தட்டை படப்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அவரது மனைவி மதுபாலா அதிர்ச்சி அடைந்தார்.
அவரும், அக்கம் பக்கத்தினரும் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், தீ மளமளவென படப்பில் இருந்து பரவி, தொழுவத்திலும் பற்றி எரிந்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்த கழுகுமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் தொழுவத்தில் இருந்த 14 ஆடுகள் தீயில் கருகி பலியாகின. மேலும், 21 ஆடுகள் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டன.
அவற்றுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார். ஆனாலும், அந்த ஆடுகளின் நிலைமை மோசமாக இருப்பதாக கால்நடை மருத்துவர் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு கயத்தாறு போலீசார் மற்றும் தாசில்தார் சுந்தரராகவன், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணசாமி, கிராம நிர்வாக அலுவலர் ரேணுகா ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags :



















