தவெகவின் 2 வது மாநில மாநாடு மத்திய,மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து 6 தீர்மானங்கள் .

மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாடு இன்று மாலை 3 மணிக்குத் தொடங்கியது. மேடையில் இருந்த நிர்வாகிகளுக்கு வணக்கம் தெரிவித்து மாநாட்டிற்கு வரவேற்ற தவெக தலைவர் விஜய், பின்னர் மேடையில் தன்னை வரவேற்க நின்றிருந்த தனது தாய் தந்தையை வலியுறுத்தி இருக்கையில் அமரவைத்தார்.
தொடர்ந்து ரேம்ப் வாக் சென்ற விஜய், தொண்டர்கள் வீசிய துண்டுகளை தன் கழுத்தில் போட்டுக்கொண்டு நடந்தார். இடையில் திடீரென தொண்டர்கள் தடுப்புக் கம்பிகளைத் தாண்டி, ரேம்ப் வழியில் ஏறினர். உடனே அவர்களை பவுன்சர்கள் கீழே இறக்கினர்.
தொடர்ந்து மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், “1967 மற்றும் 1977 ஆகிய இரண்டு முறை தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மாற்றம் நிகழ்ந்தது. அதுபோல், 2026ல் மாற்றம் வரப்போகிறது. அதனால் தான், 2வது மாநில மாநாடு வாகை சூடும் வரலாறு திரும்புகிறது எனப் பெயர் வைத்தோம்.
நமது ஒரே கொள்கை எதிரி பாஜக, ஒரே அரசியல் எதிரி திமுக இதில் எந்த மாற்றமும் கிடையாது. ஊரை ஏமாற்றும் கட்சி நமது தவெக கிடையாது. பாசிச பாஜகவுடன் மறைமுகமாகவோ, நேரடியாகவோ கூட்டணி வைக்க நாம் என்ன உலகமகா ஊழல் கட்சியா?
மார்க்கெட் போன பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, அடைக்கலம் தேடி நான் அரசியலுக்கு வரவில்லை. படைக்கலத்துடன் வந்திருக்கிறேன். இதற்கு காரணம் 30 வருடத்திற்கு மேல் என்னுடன் நீங்கள் நிற்கிறீர்கள். அதற்கான நன்றி கடன் தான் இது. உங்களுடன் உண்மையாக நின்று சேவை செய்ய உங்கள் விஜய் நான் வருகிறேன். சொல்ல அல்ல செயல் தான் முக்கியம்” என பேசினார்.
இதனையடுத்து தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் ஆறு தீர்மானங்கள் தவெக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு;
பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்துத் தீர்மானம். சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம்.ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க. அரசுக்குக் கண்டனம். அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags : தவெகவின் 2 வது மாநில மாநாடு மத்திய,மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து 6 தீர்மானங்கள்