கரூர் சம்பவத்திற்கும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை-ஜான் பாண்டியன்.
தென்காசி மாவட்டம், மேலப்பாவூர் பகுதியில் உள்ள ஒரு நுழைவாயிலை அகற்றுவது தொடர்பான பிரச்சினையில் அந்த பகுதியை சேர்ந்த தவம் என்ற நபரை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு இன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த தென்காசி மாவட்ட செயலாளரான தவம் என்பவர் ஆஜரானபோது, அவருடன் சேர்ந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் உடன் வந்தார்.
இந்த நிலையில், இந்த விசாரணையின் போது தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் கூறும்போது :-
கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது நடந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது, யாராலையும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சம்பவம் எனவும், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் நலமுடன் உள்ளார்கள்.
இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என தெரிவித்த அவர், கரூரில் இந்த துயர சம்பவம் நடைபெற்றவுடன் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்க்காமல் சென்னை சென்றதும், மேலும் இதுவரை அவர்களை நேரில் சென்று பார்க்காமல் இருப்பதும் கண்டனத்திற்குரியது என தெரிவித்தார்.
மேலும், தவெக பிரச்சாரத்தில் விபத்துக்கு காரணம் பாதுகாப்பு குறைபாடுகளும் காரணமாகவும் இருக்கலாம், இருந்தபோதும் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட அளவு தொண்டர்கள் தான் வருவார்கள் என தெரிவித்த நிலையில் அதற்கு ஏற்ப போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், கூட்டம் திட்டமிட்டதை விட அதிக அளவு கூடியதால் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும் என தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் என்பது சம்பவத்தை பொய்த்து போக செய்யக்கூடிய ஆணையம் தான், ஏனெனில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டபோது இந்த நீதி அரசர் தான் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார்.
ஆனால், இதுவரை அறிக்கை தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆகவே விசாரணை ஆணையம் என்பது சம்பவத்தை பொய்த்து போக செய்யக்கூடிய ஏமாற்று வேலை தான் என தெரிவித்த அவர், கரூர் சம்பவத்திற்கும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை, அது ஒரு விபத்து தான் என அவர் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
Tags : கரூர் சம்பவத்திற்கும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை-ஜான் பாண்டியன்.



















