பேருந்து விபத்து: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி.

by Staff / 24-11-2025 10:28:34pm
பேருந்து விபத்து: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி.

தென்காசி மாவட்டம், இடைக்கால அருகே இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் பலியான நிலையில், 40 பேர் படுகாயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இந்த நிலையில், அவர்களிடம் நலம் விசாரித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

 தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர், இந்த விபத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் மீதும் தவறுகள் இருக்கின்ற காரணத்தினால் தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இது போன்ற விபத்துக்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், காயமடைந்தவர்களுக்கு குணமாகும் வரை தேவையான சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும், தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் முழுமையான சேவைகள் இல்லாத காரணத்தினால், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதால் இதுபோன்ற நிலைமை இனி வரும் காலங்களில் ஏற்படாத வண்ணம் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் தேவையான வசதிகளை உடனடியாக செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : பேருந்து விபத்து: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி.

Share via