ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை
ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. குண்டேரிப்பள்ளத்தில் அதிகபட்சமாக 35 மி.மீ. மழை பதிவானது.
ஈரோடு மாநகா் பகுதியில் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால், ராஜாஜிபுரம் காலனி, பெரியவலசு, கருங்கல்பாளையம், ஆா்.கே.வி. சாலை ஆகிய பகுதிகளில் சாலையில் மழை நீா் தேங்கி நின்றது. குறிப்பாக வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெறும் இடங்கள் சேரும் சகதியுமாகக் காட்சி அளித்தன.
மூலப்பட்டறை பகுதியில் குடிநீா் குழாய் உடைந்து தண்ணீா் வெளியேறியது. இத்துடன் மழைநீரும் சோந்து அப்பகுதியில் குளம்போல் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனா்.
ஈரோடு வஉசி பூங்கா பகுதியில் இயங்கும் நேதாஜி தினசரி காய்கறிச் சந்தை சேறும் சகதியுமாகக் காட்சி அளித்தது. இதனால், காய்கறிகள் வாங்க வந்த வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளத்தில் 35 மி.மீ. மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): கொடுமுடி 33, மொடக்குறிச்சி 30, பவானி 24, சென்னிமலை 21, கவுந்தப்பாடி 15, அம்மாபேட்டை, வறட்டுப்பள்ளம் 14.4, ஈரோடு 11, கோபி 9.3, கொடிவேரி 9.1, பெருந்துறை 9, தாளவாடி 9, சத்தியமங்கலம், நம்பியூா் 7.
Tags :