மருத்துவக் கல்லுாரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ.43 லட்சம் மோசடி: டாக்டர் கைது
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் துக்காராம். இவர் தனது மகனுக்கு எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தரக்கோரி, நண்பர்கள் சிலரிடம் கேட்டுள்ளார்.இதையறிந்த விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த உப்புவேலுாரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 63; என்பவர் துக்காராமை அணுகி, 'தான் அகில இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குனராக இருப்பதாகவும், உங்கள் மகனுக்கு மருத்துவக் கல்லுாரியில் சீட் வாங்கி தருகிறேன். அதற்கு பணம் செலவாகும்' என கூறியுள்ளார்.இதை நம்பி துக்காராம், 2017 ஜூன் முதல் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பல தவணைகளாக 85 லட்சம் ரூபாயை பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ஸ்ரீநிவாஸ் ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.அதனைத் தொடர்ந்து 2017 ஜூலை 6ம் தேதியிட்ட அகில இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கியது போன்ற ஒரு போலியான நுழைவுச் சீட்டை பன்னீர்செல்வம் கொடுத்துள்ளார்.அதை பயன்படுத்தி துக்காராம், பெங்களூரு மருத்துவக் கல்லுாரிக்குச் சென்று கேட்டார். அப்போது, போலியானது என தெரியவந்தது.இதையடுத்து துக்காராம், பன்னீர்செல்வத்தைத் தொடர்பு கொண்டு பணத்தைத் திரும்பக் கேட்டார்.
பன்னீர்செல்வம், ஸ்ரீநிவாஸ் இருவரும் தவணை முறையில் 42 லட்சம் ரூபாயை துக்காராம் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனர். மீதமுள்ள 43 லட்சம் ரூபாயை கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர்.இதுகுறித்து துக்காராம், விழுப்புரம் எஸ்.பி., ஸ்ரீநாதாவிடம் கடந்த மாதம் 10ம் தேதி புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவின் பேரில், பன்னீர்செல்வம், ஸ்ரீநிவாஸ் ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.குற்றவாளிகள் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. டி.எஸ்.பி.,க்கள் இருதயராஜ், ரவீந்திரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான தனிப்படை போலீசார், பெங்களூரு சென்று, சாந்திவானா சாகாநகர் பகுதியில் இருந்த ஸ்ரீநிவாசை நேற்று முன்தினம் கைது செய்து, நேற்று வானுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம், வேடம்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.கைதாகிய ஸ்ரீநிவாஸ் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், டாக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :