தமிழக அரசு அதிரடி; ஊழியர்களுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ உதவி

by Editor / 13-09-2021 02:40:40pm
தமிழக அரசு அதிரடி; ஊழியர்களுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ உதவி

புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021-ன்படி, மாநில அரசு நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கான தொகையில் 5 லட்சம் ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எதிர்பாராத செலவுகளுக்காக நிதி மூலதனம் மூலம் ரூபாய் 20 லட்சம் வரை மருத்துவ உதவியைப் பெறலாம் என தமிழக அரசின் நிதித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் 2021 பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படுகிறது. புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கான தொகையில் ஐந்து லட்ச ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் காப்பீடு கட்டணமாக அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 300 பெறப்படுகிறது. இதன் மூலம், எதிர்பாராத செலவுகளுக்காக நிதி மூலதனம் மூலம் ரூபாய் 20 லட்சம் வரை மருத்துவ உதவியைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புற்றுநோய் அறுவைச் சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்கச் சிகிச்சை மற்றும் புற்றுநோய் கட்டிகளில் நோய் தடுப்பாற்றல் சிகிச்சை, கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை, சிக்கலான இதய அறுவைச் சிகிச்சை மற்றும் இதய மாற்று அறுவைச் சிகிச்சை, விபத்து, இதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை ஆகியவற்றிற்கான மருத்துவ சிகிச்சை பெற நிதி உச்சவரம்பு ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via